நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகத்தில் ‘டார்ச்லைட்’ சின்னத்தில் போட்டியிட விரும்பியது.

தேர்தல் ஆணையமோ, ‘டார்ச்லைட்’ சின்னத்தை எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. ஆனால் கமல் கட்சிக்கு புதுச்சேரி மாநிலத்தில் ‘டார்ச்லைட்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

தமிழகத்திலும் தங்களுக்கு ‘டார்ச்லைட்’ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, “எங்களுக்கு ‘டார்ச்லைட்’ சின்னம் வேண்டாம்” என எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சியின் நிறுவனர் ‘எம்.ஜி.ஆர்’ விஸ்வநாதன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் கமல் கட்சிக்கு தமிழகத்தில் ‘டார்ச்லைட்’ சின்னம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலிடம் காசு வாங்கிக்கொண்டு , ‘டார்ச்லைட்’ சின்னத்தை, எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி, விட்டுக்கொடுத்துள்ளதாக செய்திகள் பரவிய நிலையில் அதனை மறுத்துள்ளார், விஸ்வநாதன்.

“பண ஆதாயத்துக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு நான் கடிதம் எழுதியதாக கூறப்படுவது உண்மை அல்ல. நான் எம்.ஜி.ஆர். ரசிகன். சட்டத்துக்கு புறம்பாக எதையும் பெறுவதற்கு நான் விரும்ப மாட்டேன். எம்.ஜி..ஆர் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் நிறுவ வேண்டும். அதுவே என் ஆசை” என்கிறார், எம்.ஜி.ஆர். விஸ்வநாதன்.

– பா. பாரதி