விவசாயிகளுக்கு வருமானவரி கூடாது: எம்.எஸ்.சுவாமிநாதன்

 

Do not agree with tax on agriculture income, says Father of Green Revolution

 

விவசாயிகள் பிரச்னை நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், நாடு முழுவதும் அது குறித்த உரையாடல்களும், விவாதங்களும் அதிகரித்து வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளின் ரூ36,350 கோடி கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் யோகி ஆதித்யா உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப்பில் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் வல்லுநர் குழு ஒன்றை அமைத்துள்ளார். தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னையைத் தீர்க்க, வலிமையான நடவடிக்கை எதையும் மாநில அரசு எடுத்ததாக தெரியவில்லை. மற்றொருபக்கம், விவசாயிகளின் வருமானத்திற்கும் வரி விதிக்க வேண்டும் என நிதிஆயோக் உறுப்பினர் ஒருவர் கிளம்பி இருக்கிறார்.

 

இந்நிலையில், வேளாண் விஞ்ஞானியும், பசுமைப்புரட்சிக்கு வித்திட்டவருமான எம்.எஸ்.சுவாமிநாதன், விவசாயிகள் பிரச்னை குறித்து ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

அவர் கூறியிருப்பதாவது:

 

விவசாயிகளிடம் வருமானவரி வசூலிக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினருக்கும் மேற்பட்டோருக்கு விவசாயமே வாழ்வாதாரத் தொழில். அதுமட்டுமின்றி மனித சமூகத்தில் வாழ்வாதாரம் சார்ந்த பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய தொழில்.

 

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வது குறுகியகாலத் தீர்வாக அமையலாம். ஆனால், சிறுவிவசாயிகள் நீண்டகாலமாகச் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தீர்க்க அது போதாது. உற்பத்திக்கு உரிய விலைகிடைப்பதில் உள்ள தடைகள், லாபம் ஈட்டுவதில் உள்ள சிக்கல்கள் போன்ற  நீண்டகாலப் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். விவசாயத்தை பன்முக தொழிலாக மாற்றுவதற்கான தேவை உள்ளது. தோட்டப்பயிர்கள், கால்நடை வளர்ப்பு போன்ற விவசாயத்தின் சார்புத் தொழில்களை மேம்படுத்த வேண்டும். பஞ்சாப்பில் விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும். அதற்கான தொழில்நுட்ப உதவிகளை பஞ்சாப் பல்கலைக்கழகம் செய்ய வேண்டும். பஞ்சாப்பிலும், மற்ற பகுதிகளிலும் எப்போதும் பசுமைப்புரட்சி நடைபெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை விவசாயிகளுக்கான தேசிய  ஆணையம் விரிவாக பரிந்துரைத்துள்ளது. நிலத்தின் தன்மையைப் பாதிக்காமல், மகசூலை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து அதில் விரிவாக கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை விளிம்புக்கு தள்ளப்படுவதற்கான காரணங்கள் குறித்தும் அந்தப் பரிந்துரையில் விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அந்தப் பரிந்துரைகள் அளிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆன பின்னரும், நடைமுறைப்படுத்தப்படவில்லை.

 

இவ்வாறு அந்தப் பேட்டியில் எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.