கேரள தங்கம் கடத்தல் வழக்கு: முன்னாள் தலைமை செயலாளரை கைது செய்ய தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளரை கைது செய்ய உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது.

திருவனந்தபுரத்தில் ஜூலை 5ம் தேதி தூதரகத்திற்கு வந்த பார்சலில் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இந்த விவகாரத்தில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.  அவர் இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் கோரி உள்ளார்.  அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:  வழக்கு விசாரணையின் போது ஆஜராகவும், ஒத்துழைக்கவும் சிவசங்கர் தயாராகவே இருக்கிறார். 100 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. வழக்கிற்கு அவர் இடையூறு செய்கிறார் என்ற எந்த குற்றச்சாட்டும் இல்லை. அவர் தப்பியோட போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பதில் மனு அளிக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கால அவகாசம் கோர விசாரணையை வரும் 23ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது.  அதுவரை சிவசங்கர் கைது செய்யப்பட கூடாது என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.