ஒருவரை வீழ்த்த வேண்டும் என்று கேள்வி கேட்காதீங்க!: செய்தியாளர்களுக்கு கிருஷ்ணசாமி அட்வைஸ்

ருவரை வீழ்த்த வேண்டும் என்று கேள்வி கேட்காதீர்கள் என்று செய்தியாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுரை கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம், “எழுவர் விடுதலை” குறித்து கேட்கப்பட்டது. “எந்த ஏழுபேர்” என்று ரஜினி கேட்டார். “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவர்” என்று விளக்கிய செய்தியாளர்கள், “இவர்கள் விடுதலை குறித்து தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை குடியரசுத்தலைவருக்கே அனுப்பாமல் அவர் நிராகரிதுவிட்டதாக மத்திய உள்துறையே திருப்பி அனுப்பி விட்டதே” என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.

அதற்கு ரஜினி, “நான் இப்போதான் வர்றேன். எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.

இதற்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

“ராஜீவ் கொலை கைதிகள் ஏழு பேர் குறித்து ரஜினிக்கு தெரியாதா” என்று விமர்சித்தனர்.  இன்னொரு பக்கம், “திடீரென ஏழு பேர் விடுதலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று திடீரென கேட்டதால் ரஜினி குழம்பியிருக்கலாம். அது தவறில்லை. ஆனால் அது குறித்து செய்தியாளர்கள் விளக்கிய பிறகு அவர்கள் விடுதலை குறித்து தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமலேயே மத்திய உள்துறை நிராகரித்து திருப்பி அனுப்பியிருப்பது குறித்து கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என்கிறார் ரஜினி.

இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வந்துகொண்டிருக்கிறது. பாமரர்களுக்கே தெரிந்த விசயம். ஆனால் முதல்வர் ஆவேன்.. நாட்டின் சிஸ்டத்தையே மாற்றுவேன் என்பவர் தெரிந்துகொண்டிருக்க வேண்டாமா” என்றும் விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து நேற்று செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்த ரஜினி,    சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லம் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவர் பற்றி தெரியாத அளவுக்கு நான் முட்டாள் அல்ல” என்று தெரிவித்தார்.

மேலும், ஏழு பேர் குறித்து ரஜினிகாந்த்துக்கு ஒன்றுமே தெரியாது என்பதைப் போன்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர். செய்தியாளர்கள் கேட்ட கேள்வி சற்று தெளிவாக இல்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேர் தொடர்பாக தமிழக அரசு அளித்த கடிதம் என்று கூறியிருந்தால், எனக்கு புரிந்திருக்கும். ஏழு பேரும் 27 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்வதுதான் நல்லது” என்றார்.

இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

“தமிழக அரசியல் கட்சிகளுடைய பன்முக வேடங்கள் தமிழக மக்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. புலிகளோடு தாங்களும் நெருக்கமாக இருப்பதாக பலவழிகளில் காட்டிக்கொள்ளக்கூடிய பல கட்சிகள் விடுதலைப் போராளிகளுக்கு ஆபத்துக் காலத்தில் கரம் நீட்ட முன்வரவில்லை; இப்பொழுது 7 பேர் என்று கத்துகிறார்கள்; இதுதான் தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் நிலை.

அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது மிக நல்ல முயற்சி. அதைப் பாராட்டுவதற்குக் கூட யாருக்கும் மனது வரவில்லை. எங்கே பாராட்டினால் அவர்களுக்கு ஓட்டு போய்விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு. அமைச்சரவையில் முடிவெடுத்து அவர்களை விடுதலை செய்ய மாநில அரசு முடிவெடுத்தபிறகு இன்னும் ஆளுநர் எந்தப் பதிலும் சொல்லவில்லையே; முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திட துடிக்கிற பல்வேறு கட்சிகள் ஏன் இதற்கு ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை? தமிழக பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் தமிழக அரசியல் கட்சிகளிடத்தில் ஏன் இந்த கேள்வியைக் கேட்கவில்லை?

ஆனால் இன்னும் அரசியலுக்கு வராத ஒருவரிடத்திலே (ரஜினிகாந்த்)  7 பேர் என்று பொத்தாம் பொதுவில் கேட்டால் என்ன புரிந்திருக்கக் கூடும்? திடீரென்று 7 பேர் என்ற உடனேயே அதைப்பற்றிய கருத்து மனதிற்கு வராமல் இருந்திருக்கலாம்; கேள்வி கேட்கின்ற போது சூசகமாக கேட்கக்கூடாது; மடக்க வேண்டுமென்று கேட்கக்கூடாது; ஒரு விசயத்தில் தெளிவு பிறக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தான் கேள்வியைக் கேட்க வேண்டும்.

7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்த பிறகும் காலதாமதம் ஏற்படுவது குறித்து அவரது கருத்தைக் கேட்டிருக்கலாம். அவர் அப்பொழுது பதில் சொல்லாவிட்டலும் கூட, இன்னொரு சந்தர்பத்தில் பதில் வாங்கலாம்; அவருடைய பதிலை விவாதப் பொருளாக்குவது பொது அரசியலுக்கு எந்த விதத்திலும் ஆரோக்கியமானதல்ல. இந்தக் கேள்வியை உண்மையிலேயே கேட்க வேண்டுமென்றாலும் கூட தமிழ், தமிழ் தேசியம், தமிழ்சாதி, திராவிடம் என்று பேசி ஓட்டு வாங்கக்கூடிய கட்சிகளிடம் தான் இந்தக் கேள்விகளை கேட்கவேண்டும்; அதற்குண்டான பதிலையும் பெற வேஎண்டும்” என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்..

 

You may have missed