சபரிமலை விவகாரம் குறித்து என்னிடம் கேட்க வேண்டாம்!: கமல்

பரிமலை விவகாரம் குறித்து தன்னிடம் கேட்க வேண்டாம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான  கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல் ஹாசன் சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

“தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறேன். ஏற்கனவே திரைப்படம் மூலம் மக்களுக்கு என்னை தெரியும்.  ஆனால் தற்போது மக்களை சந்திப்பது என்பது எங்களுடைய அரசியல் பாதையில் எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று மக்களிடம் கேட்டறியவே பயணிக்கிறேன்.

வருகின்ற தேர்தலுக்கான பணிகளை எங்கள் கட்சிக்குள்ளே பேசி தயார்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

ராகுல் காந்தியை நான் சந்தித்தது பலநாட்களுக்கு முன்பு. சமீபத்தில் அல்ல. ஆகவே காங்கிரஸுடன் கூட்டணியா என்று இப்போது சொல்ல இயலாது.

சபரிமலை பக்தர்களின் உணர்வு குறித்து என்னிடம் கருத்து கேட்பது சரியாக இருக்காது, காரணம், எனக்கு அதுபற்றி தெரியாது. நான் சபரிமலைக்கு சென்றதில்லை. ஆகவே பக்தர்களின் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற இயலாது.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வில்லை. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள மக்கள் மதிக்கவில்லை. ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

சபரிமலை குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு வரவேற்றது. ஆனால் கேரளாவில்   ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறது. இதிலும் அரசியல் இருக்கிறது.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் பெண்கள், காவல்துறை பாதுகாப்புடன் செல்வது என்பது அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது என்று சொல்லலாம். பறிக்கப்படவில்லை”  என்று  கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும், “அமைச்சர் ஜெயக்குமார் என்னைப் பற்றி விமர்சனம் செய்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்.

துரைமுருகன், கமல் நடிப்பு பிடிக்கும், கமல் அரசியல் பிடிக்காது என்று கூறி இருக்கிறார்.  அவரது நடிப்பு பிடிக்க வில்லை.

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் என்னை தொடர்ந்து விமர்சிப்பதற்கு காரணம் என்மீது கொண்ட பதட்டம் தான்” என்று கமல் தெரிவித்தார்.