சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.

மேலும், அவருடன் தொடர்புடைய எம்.ஜி.ஆர்.பலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார், சுகாதாரத்துறை செயலாளர் வீடு போன்றவற்றிலும் ரெய்டு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து துணைவேந்தர் கீதாலட்சுமி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது.

ஆனால், அவர் நேரில் ஆஜராகாமல், வருமான வரித்துறையினரின் சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப வருமானவரித்துறைக்கு அதிகாரமில்லை என்றும், தனது வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த மனுகுறித்த விசாரணை இன்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கீதாலட்சுமிக்கு கடும் கண்டனம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டியது கீதாலட்சுமியின் கடமை. மேலும் கீதாலட்சுமி வீட்டில் நடந்த சோதனைக்கு பிறகுதான் சம்மன் அனுப்பப்பட்டது என்றும்,டாக்டர் கீதாலட்சுமி தப்பிக்க முயற்சிக்க கூடாது, அரசு பணியில் இருந்தாலும் அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்  எனவும் கூறியுள்ளது.

இதனையடுத்து அவர் தனது மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார்.