சென்னை,

சென்னையில் நேற்று இரவு மழை நின்று பெய்யும் என்று அறிவித்திருந்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தற்போது இன்று சென்னையில் மிதமான மழையே நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சென்னை வாசிகள் பயப்படத்தேவையில்லை என்றும் கூறி உள்ளார்.

ஆனால், சென்னை வானிலை மையமோ சென்னையில் இன்றும் கனமழை நீடிக்கும் என்று பயமுறுத்தி உள்ளது.

நேற்று மாலை முதல் சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.  நேற்றிரவு முதல்  விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. நுங்கம்பாக்கம், தரமணி பகுதிகளில் 19 செ.மீ., மழை பெய்தது. இதனால் கடந்த 2015ம் ஆண்டு போல தற்போதும் அசம்பாவிதம் ஏற்படுமோ என சென்னைவாசிகள் கலக்கத்தில் இருந்தனர்.

இந்நிலையில், சென்னை மழை நிலவரம் குறித்து வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாவது,

“நேற்று தொடங்கிய பலத்த மழை முடிவுக்கு வந்துவிட்டது. மழை தரும் பெரும் மேகக்கூட்டங்கள் சென்னை கரையைவிட்டு விலகியே நிற்கின்றன. அச்சப்படத் தேவையில்லை. கரையை நெருங்க நெருங்க மேகக்கூட்டங்கள் சிதறும் நிலையே தென்படுகிறது. கரையை நெருங்கும்போது வலுவான மேகக்கூட்டங்கள் எல்லாம் (Stratiform clouds) என்ற அடுக்கியல் வடிவம் கொண்ட மேகக்கூட்டங்களாகவே மாறுகின்றன.

இத்தகைய மேகங்களால் மிதமான மழை மற்றும் தூரல்களுக்கே வாய்ப்பிருக்கிறது. இதில் ஏதாவது மாற்றமிருந்தால் உங்களுக்கு உடனே தெரிவிக்கிறேன்.

இப்போதைக்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை. வெயில் அடித்தாலும்கூட ஆச்சரியப்படு வதற்கில்லை. அதேவேளையில், காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் சென்னைக்கு மழை முடிந்துவிட்டது எனக் கூறிவிடமுடியாது

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.