வதந்திகளை நம்ப வேண்டாம்: அரசு துரிதகதியில் செயல்படுகிறது! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை:

ருவமழை பாதிப்புகளை அரசு துரித கதியில் எதிர்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏரிகள் உடையும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம், அப்படி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.

சென்னை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலகமான எழிலகத்தில் பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக மழை, வெள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது  அவர் கூறியதாவது,

பேரிடர் காலங்களில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வெள்ளம் பாதிக்கும் 4500 இடங்கள் கண்டறியப்பட்டு மீட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் மாவட்டங்களில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் உள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் இயற்கையாகவே தண்ணீர் தேங்குகிறது. அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம்  விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். சுமார்  600 தாழ்வான பகுதி இருப்பதாகவும், அந்த பகுதிகளில்  கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பருவமழை பாதிப்புகளை சரி செய்ய அரசு துரிதகதியில் செயல்பட்டு வருகிறது. கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும்  கடலோர மாவட்டங்களில் 578 பகுதிகள் மிகவும் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழைக்காலம் என்பதால், முன்னேற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் உண்மை இல்லை. ஏரிகள் உடையும் என்பது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.

வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோவை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தேனியில் இயல்பை விட இந்தாண்டு கூடுதல் மழை பெய்து உள்ளது.

சிறு, பெரிய நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.