ரஷ்ய ஏவுகணை வாங்கக்கூடாது!: இந்தியாவுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

ஷ்யாவுடன் எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா வாங்கக் கூடாது என்றும் இல்லாவிட்டால்  பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுமார் 400 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து சென்று எதிரி ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் திறன் கொண்ட எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷ்யா  தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து சீனா ஏற்கெனவே வாங்கியிருக்கிறது. இந்த நிலையில் இந்த ஏவுகணைகளை வாங்க இந்தியாவும் விருப்பம் தெரிவித்தது. முதல்கட்டமாக ரூ.40,000 கோடி மதிப்பில் ஐந்து ஏவுகணைகளை வாங்க இந்திய அரசு முடிவு செய்தது.

மோடி – டிரம்ப்

ஆனால் ரஷ்யாவிடம் ராணுவ தளவாடங்களை வாங்கும் நாடுகள் தடை செய்யப்பட்ட பட்டியலின் கீழ் இந்தியாவும் சேர்க்கப்பட்டு பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார்.  மேலும் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க வகை செய்யும் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் ரஷ்ய ஏவுகணைகளை வாங்க இந்தியா முனைப்பாக இருக்கிறது.  இதற்காக பிரதமர் மோடி ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து ஒப்பந்தம் தொடர்பாக இறுதி செய்தார்.

இதனிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று டில்லி வருகிறார். அப்போது அவருடன், பிரதமர் மோடி சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எஸ்- 400 ஏவுகணைகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது

இந்நிலையில் நேற்று மீண்டும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘ரஷ்யாவிடம் இருந்து எஸ்- 400 ஏவுகணைகள் வாங்குவதற்கு ஏற்கெனவே அமெரிக்கா தடை விதித்திருக்கிறது.  இதை  மீறி இந்தியா ஏவுகணைகளை வாங்கினால் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிப்பதை தவிர அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை. ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை கைவிடுவதுதான் இந்தியாவுக்கு நல்லது’’ என கூறப்பட்டுள்ளது.