எண்ணூர் கடற்பகுதி

சென்னை :

ண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களை மூன்று மாதங்கள் சாப்பிடாதீர்கள் என்று விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் சென்னை எண்ணூர் கடற்கரை பகுதியில் இரு கப்பல்கள் மோதியதால் கடலில் கொட்டிய கச்சா எண்ணை பல கிலோமீட்டர் பரப்புக்கு கடலில் பரவியுள்ளது. இதனால் அப் பகுதியில் பெரும் சுற்றுப்புறச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் பிடிக்கப்பட்ட மீன்களில் பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தால் சென்னை மற்றும் சுற்றுப்புற வட்டார மக்கள் மீன் வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பென்ஜமின், மீன்வளத்துறை ஆணையர் பீலாராஜேஷ்  ஆகியோர் அந்த பகுதியில் பிடிக்கப்பட்ட மீன்களை சமைக்கச் சொல்லி சாப்பிட்டனர்.

ஆனால், “எண்ணை படர்ந்துள்ள கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட மீன்களை சாப்பிட வேண்டாம்” என்று விஞ்ஞானியும், ‘டெரி’ (தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட்) நிறுவனத்தின் இயக்குனருமான பன்வாரி லால் தெரிவித்துள்ளார்.

மீன் சாப்பிட்ட அமைச்சர்கள்

இது குறித்து பன்வாரி தெரிவித்துள்ளதாவது:

சென்னை எண்ணூர் எண்ணெய்க் கசிவால் அப்பகுதி  கடல் மிகவும் மாசுபட்டுவிட்டது.  இதனால்,  மீன்கள், கடல் ஆமைகள், கடல் பறவை போன்ற உயிரினங்கள்  “உடல் வெப்பநிலைய் தாழ்வு” (hypothermia) என்ற பிரச்னையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இப்பகுதியில் உள்ள எண்ணெயால் கடல் உயிரினங்களில் உள்ள ரோமங்கள், அதன் உடல் பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன. இதனால் அவற்றின்  உடல் வெப்பநிலையை பராமரிக்க  அவற்றால் முடிவதில்லை. மேலும் கடல் உயிரினங்கள் எண்ணெய் மாசை விழுங்குவதால் அதற்கு சிறுநீரகம், கல்லீரல் பகுதிகள் பாதிக்கப்படுவோதோடு, ரத்த சிவப்பணு சிதைவு, நோய் தடுப்பாற்றல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. ஆகவே உயிரினங்கள் மரணமடைகின்றன.

இவற்றை நாம்  உண்பதால் நமக்கும் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். ஆகவே, இப்பகுதியில் பிடிக்கும் மீன்களை குறைந்தது மூன்று மாதங்கள் தவிர்ப்பது அவசியம்” என்று விஞ்ஞானி பன்வாரி லால் தெரிவித்துள்ளார்.