3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி

டில்லி:

ரேஷன் கார்டுகள் வைத்திருப்போர் தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் தவிர்த்து வந்தால், அவர்களது ரேஷன் கார்டுகளை ரத்து செய்யலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பொருட்கள் தரமில்லைததால், பெரும்பாலானோர்  ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால், அவர்களின் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு விட்டதாக கூறி, ரேஷன் கடை ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கும் விதத்தில்,  ரேஷன் பொருட்களை 3 மாதங்கள் தொடர்ச்சியாக வாங்காமல் இருக்கும் பொது விநியோகத் திட்ட பயனாளிகளின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

டில்லியில் நடைபெற்ற  மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடில் பேசிய  மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை உறுதிபடுத்த வேண்டும். உரிய பயனாளிகளுக்குத்தான் அவை அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறு மாநில அரசுகள் அறிவுறுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,  மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களைக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் தேவைப்படாத குடும்ப அட்டைதாரர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மாநிலங்களில், பட்டினிச் சாவு ஏற்படாமல் மக்களுக்கு உணவு தானியங்களை கிடைக்கச் செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளுக்கு வந்து பொருள்களை வாங்க இயலாத நிலையில் இருப்பவர்களின் வீடுகளுக்கே நேரடி யாகச் சென்று மானிய விலையில் உணவு தானியங்களை விநியோகிக்க வழி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.