தனது விடுதலை பற்றிய விவரங்களை 3வது நபருக்கு கொடுப்பதா? கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்!

பெங்களூரு: தன்னைப் பற்றியோ, தனது விடுதலைப் பற்றியோ, 3வது நபருக்கு எந்தவிவரமும்  கொடுக்கக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் விடுதலையா வார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தயவுடன் தேர்தலை சந்திக்க உள்ள பாஜக, சசிகலாவை பகடைக்காயாக பயன்படுத்தி,  உடைந்த அதிமுக ஒன்றிணைத்து, திமுகவுக்கு போட்டியாக தமிழக தேர்தல் களத்தில்  குதிக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபகால  தமிழக அரசியல் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் தற்போதைய எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியின் ஆயுட் காலம் அடுத்த ஆண்டு  (2021)  மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அதுபோல, சசிகலாவின் 4 ஆண்டு சிறைத்தண்டனையும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான்  முடிவடைய வுள்ளது. ஆனால், சசிகலா முன்கூட்டியே விடுதலையாவார் என கணிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவை சிறையில் இருந்து வெளிக்கொணர டிடிவி தினகரன்  தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சிறையில் உள்ள சசிகலா  2021ம் ஆண்டு ஜனவரி 27 ஆம் ஆண்டு அவர் விடுதலை ஆவார் என்று ஆர்டிஐ மூலம் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, அவர் செலுத்த வேண்டிய அபராத தொகையான  10 கோடி ரூபாய் செலுத்தவும் தயாராக இருப்பதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என  பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந் நிலையில்,  தன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதி உள்ளார்.

முன்னதாக சமூக ஆர்வலர், நரசிம்ம மூர்த்தி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி ஆர்.டி.ஐ மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சசிகலா ஆண்டு(2021) ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார். ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். இந்த அபராதத் தொகையை கட்டத் தவறினால் சசிகலாவின் விடுதலை ஓராண்டு தள்ளிப் போகும் என்று சிறைத்துறை தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக வழக்கறிஞர்களிடம் தீவிர ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன்,  டெல்லி சென்று, பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் எழுந்தன.   இந்த நிலையில் ஆர்.டி.ஐ மூலம் மூன்றாம் நபருக்கு எப்படி தன்னுடைய விவரங்களை அளிக்கலாம் என்று சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.