Random image

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கக்கூடாது!: ஏராளமானோர் புகார்

சென்னை:

திரைப்பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட இருப்பதாகவும் அவருக்கு அளிக்கக்கூடாது என்றும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஞானபீட விருது அளிக்கும் நிர்வாகத்தினருக்கு புகார்கள் சென்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஞானபீட விருது

ஞான பீட விருது (Jnanpith Award ) என்பது இந்தியாவில்இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருதாகும்.  இந்த விருதை  பாரதிய ஞானபீடம் (Bharathiya Jnanpitham) என்ற பண்பாட்டு இலக்கியக் கழகம் வழங்குகிறது. வருடந்தோறும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு அளிக்கப்படுகிறது.

வைரமுத்து

இந்த அறக்கட்டளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது.

1954 -ல் இதைத் தோற்றுவித்தவர் சாந்திபிரசாத் ஜெயின்(Shanti Prasad Jain) என்பவர்.

இந்த விருது பெறுவோருக்கு, இந்திய 5 லட்ச ரூபாய் பரிசு,  தங்கமும் செம்பும் கலந்த பட்டயம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன கலைமகள் (வாக்தேவி) சிலை அளிக்கப்படும்.

1961ல் இந்த விருது நிறுவப்பட்டது. 1965ல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குருப் (G Shankara Kurup)க்கு அளிக்கப்பட்டது.

1982 வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பை பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை, அதிகப்பட்சமாக, கன்னட மொழி எழுத்தாளர்கள் 7 முறையும் இந்தி மொழி எழுத்தாளர்கள் 6 முறையும் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள். தமிழுக்கு இரண்டு முறை மட்டுமே கிடைத்துள்ளது. ( 1975ல் அகிலன், 2002ல் ஜெயகாந்தன்.)

இந்த விருது மிக மரியாதைக்குரியதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில்தான், இவ்விருதை வாங்க, வைரமுத்து லாபி செய்து வருகிறார் என்றும் அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்தார். இதையடுத்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கக்கூடாது என்று குரல் எழுப்புபவர்களில் முக்கியமானவர்  கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்.

லஷ்மி மணிவண்ணன்

சங்கருக்கு கதவற்றவீடு, வீரலட்சுமி உட்பட ஐந்து கவிதைத் தொகுப்புகள், அப்பாவின் வீட்டில் என்ற நாவல், வெள்ளைப் பல்லி விவகாரம் உட்பட மூன்று சிறுகதைத் தொகுப்புகள், குழந்தைகளுக்கு சாத்தான் உள்ளிட்ட இரு கட்டுரைத் தொகுப்புகள் எழுதியவர் லக்ஷ்மி மணிவண்ணன்.

கல்குதிரை, சிலேட், தீராநதி, அம்ருதா உள்ளிட்ட இலக்கிய இதழ்களில் எழுதி வருபவர்.

இவரிடம், “வைரமுத்துவுக்கு ஏன் ஞானபீட விருது வழங்கக்கூடாது என்கிறீர்கள்” என்று கேட்டோம்.

அதற்கு விரிவாக அவர் அளித்த பதில்:

“ஒவ்வொரு மொழியிலும் பலவித எழுத்துநடைகள் உண்டு. இதில் மிக சாதாரணமான எழுத்துடையும் இருக்கிறது. இது எல்லா மொழிகளிலும் உள்ளதுதான். ஆனால் எந்தவொரு மொழியிலும் இந்த சாதாரண எழுத்து நடைக்கு இலக்கிய மதிப்பு கிடையாது.

உதாரணமாக கேரளாவில் எடுத்துக்கொள்வோம். அங்கும் சாதாரண எழுத்துநடை கொண்ட நூல்களை விரும்பி வாசிப்போர் உண்டு. அந்த வாசகர்களேகூட,  தனது மலையாள மொழியில் சிறந்த எழுத்துக்களும் உள்ளது என்பதை அறிவர்.  அதற்கு உதாரணமாக  பசீர் உள்ளிட்ட சில எழுத்தாளர்களை அந்த வாசகர்கள் சொல்வார்கள். அந்த அளவுக்கு தமிழ் வாசகர்கள் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் என்பது நமது குறையே.

தவிர மலையாளம் போன்ற மொழிகளில் எழுதும் சாதாரண எழுத்தாளர்களும்கூட சிறந்த எழுத்தாளர்களை.. எழுத்து நடையை அறிவார்கள். அவர்கள் உயரிய விருதுகளுக்கு போட்டிபோடுவதில்லை.

ஆனால் தமிழில் பிரச்சினை என்னவென்றால்.. வைரமுத்து போன்ற சாதாரண எழுத்துநடை கொண்டவர்கள், எழுத்துக்குத் தொடர்பில்லாத பிற அதிகார மையங்களைத் தொடர்பு வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள்.  அதுமூலமாக இவர்கள் சாகித்ய அகாடமி, ஞானபீடம் போன்ற மதிப்பு வாய்ந்த விருதுகளை அபகரிக்கும் நிலை உள்ளது.

இது தடுக்கப்பட வேண்டும்.

நேசனல் புக் ட்ரஸ்ட், சாகித்ய அகடமி, ஞானபீடம் போன்றவை வெளியிடக்கூடிய பிற மொழி நூல்களை வைத்துத்தான் அம்மொழியை மதிக்கிறோம். அதே போலத்தான் பிற மொழியினரும்.

இந்த நிலையில் வைரமுத்து போன்ற சாதாரண  எழுத்தாளர்களுக்கு விருது அளிக்கப்பட்டால் அவர்களது படைப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும். அவற்றைப் படிக்கும் பிற மொழியினர், தமிழ் குறித்து குறைவாக மதிப்பிடும் ஆபத்து இருக்கிறது.

உண்மையில் தற்போது நவீன இலக்கியம் தமிழில் உச்சத்தில் இருக்கிறது. புதுமைப்பித்தனில் இருந்து துவங்கி மௌனி, லா.ச.ரா, எம்.வி. வெங்கட்ராமன், கி.ராஜநாராயணன் உட்பட பலர் உண்டு. கவிஞர்களில் உலக கவிதைகளுக்கு இணையாக எழுதக்கூடியவர் தேவதச்சன்.

இவர்களைப்போன்ற தகுதியானவர்களுக்கு அளிக்க வேண்டும். அதுதான் தரமான தமிழை, பிற மொழியினரிடம் கொண்டு போய் சேர்க்கும்.  தமிழின் உண்மையான செழுமையை பிறருக்கு எடுத்துக்காட்டும்.

இற்காகத்தான் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது தரக்கூடாது என்று வாசகர்களே புகார் மனு ஒன்றை உருவாக்கி, ஞானபீடத்துக்கு அனுப்பி வருகிறார்கள்.

தற்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கக்கூடாது என்று அந்த அறக்கட்டளை நிர்வாகத்தினருக்கு புகார் அனுப்பியுள்ளனர்” என்றார் லஷ்மி மணிவண்னன்.

“ஞானபீட விருதை வாங்க வைரமுத்து முயல்கிறார் என்பதை எதை வைத்துச் சொல்கிறீர்கள்” என்று கேட்டோம்.

அதற்கு லஷ்மி மணிவண்ணன், “இதுவரை வைரமுத்து “வாங்கிய” விருதுகள் குறித்து பேசினால் பல பக்கங்களுக்கு சொல்ல வேண்டியிருக்கும். தகுதிக்கு மீறிய அங்கீகாரத்துக்கு ஏங்குபவர் அவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

குறிப்பாக ஒரே ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன். தனது எழுத்தை எழுத்தாளர் ஜெயகாந்தன் பாராட்டியதாக பிரபல வார இதழில் தெரிவித்தார் வைரமுத்து. ஆனால் அப்போது ஜெயகாந்தன் முதுமையினால் நினைவு தப்பிய நிலையில் இருந்தார் என்பதை போட்டு உடைத்தார் ஜெயகாந்தனின் மகள்.

இப்படிப்பட்டவர்தான் வைரமுத்து. ஆகவே ஞானபீட விருதை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று வைரமுத்து முயற்சிக்கிறார் என்றால் நம்பும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். அப்படி நடந்துவிடக்கூடாது என்று நாம் தவிப்பதும், தமிழுக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று துடிப்பதும் நியாயம்தானே..” என்றார் லஷ்மி மணிவண்ணன்.

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கக் கூடாது என புகார் அளிக்கும் தொடுப்பு (லிங்க்) கீழே:

 

 

 

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கக்கூடாது என்று புகார் அளிக்க…