பெங்களூரு:

ர்நாடகாவுக்கும், கோவாக்கும் இடையே உள்ள நதி நீர் பிரச்சினை காரணமாக நாளை கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுக்கள்  நாளை கர்நாடகா செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

தமிழகத்திற்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி பிரச்சினை இருப்பதுபோல, கர்நாடகாவுக்கும், கோவா வுக்கும் இடையே மகதாயி நதி நீர் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

கோவாவில் தற்போது பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக  முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் இருந்து வருகிறார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்   இந்த ஆண்டு கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.

இந்நிலையில், மகதாயி  நதி நீர் பிரச்சினையை பாரதியஜனதா கட்சியினர் கையிலெடுத்து அரசியல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக, கோவா மற்றும் கர்நாடகா மாநிலங்கள்  இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், மகதாயி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் மத்திய அரசுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளன. இதையடுத்து, கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு நடத்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள்  அழைப்பு விடுத்துள்ளன.

இந்த விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசு மவுனம் சாதித்து வருகிறது. இதன் காரணமாக அரசும் பந்துக்கு மறைமுகமாக ஆதவு அளித்து வருவதால், போக்குவரத்து சங்க ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளனர். இதன் காரணமாக  நாளை அரசு பேருந்துகளும் இயங்காத சூழல் உருவாகி உள்ளது.

கன்னட அமைப்புகளின் பந்த் அறிவிப்பு பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை விட்டுள்ளன. மேலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பந்துக்கு ஆட்டோக்கள், கால் டாக்சி டிரைவர்களும் ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. தியேட்டர்களும் முடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக போக்குவரத்து கழக பேருந்துகளும், கர்நாடக எல்லைவரை மட்டுமே செல்லும் என வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நாளை கர்நாடகாவுக்கு செல்ல விரும்புபவர்கள் ரெயில் பயணங்களை மட்டுமே நம்பி போகலாம்.  பேருந்து மற்றும் தனியார் வாகனங்களை நம்பி பிரயாணம் செய்வது தேவையற்ற சர்ச்சைக்கு காரணமாகிவிடும்.

ஏற்கனவே வரும் பிப்ரவரி 4ந்தேதி பிரதமர் மோடி பெங்களூரு வர இருக்கிறார். அன்றும் பெங்களூரில் பந்த் நடத்தப்படும் என கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.