சென்னை:

ஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம் என்று  கனெக்ட் 2019 என்று 2நாள் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்திய தொழில கூட்டமைப்பும் (சிஐஐ), தமிழக அரசும் இணைந்து கனெக்ட் 2019 2 நாள் மாநாடு சென்னையில் தொடங்கியது.  சென்னை நந்தம்பாக்கத்தில்  மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது,

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலும் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் நல்ல பயன்களைத் தந்துள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற கனெக்ட் கூட்டத்தில் பங்கேற்ற போது, தமிழகத்தில் புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டுமென பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவா்களை கேட்டுக் கொண்டேன்.

எனது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து புதிய முதலீடுகள் செய்யப்பட்டன. கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.6,500 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. இதன்மூலம், மாநிலத்தில் 60 ஆயிரத்து 100 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பச் சேவைத் துறையில் ஏற்றுமதி மட்டும் 10 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், வேலைவாய்ப்புகளும் 4 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதை மத்தியஅரசும் உறுதி செய்துள்ளது.  நீதி ஆயோக் வெளியிட்ட அறிக்கைப்படி, இந்தியாவில் அதிக புதுமைகளைப் படைக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடம் பெற்றுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  தமிழக அரசின் சாா்பில் மின்னணு வன்பொருள் உற்பத்திக் கொள்கையானது விரைவில் வெளியிடப்படும். இந்தக் கொள்கையின் மூலமாக புதிய தொழில் முனைவோரும், நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடுகளைச் செய்வதற்கு வழி ஏற்படும். இது மாநிலத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி அதன் வழியாக பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பை அளித்திடும்.

அனைத்து கிராமங்களுக்கும் இணைய சேவையைக் கொண்டு சோ்க்கும் வகையில், ரூ.1,815 கோடியில் பாரத்நெட் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதன்மூலம், தமிழகத்திலுள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் ஃபைபர் ஆப்டிக் (கண்ணாடி இழை கட்டமைப்பு) மூலம் இணைக்கப்படும். இந்தத் திட்டமானது அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.

நாங்கள் முதலீட்டாளர்களை அரவணைக்கும் மாநிலமாக இருக்கும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அவரது வழியில், முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசாக நாங்களும் இருக்கிறோம். சென்னையில் பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் துவங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் அமைதியான மாநிலமாகவும், மனித வள ஆற்றல் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் இருப்பதுதான் இதற்கு காரணம். லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியலாளர்களாக வருடந்தோறும் வெளியேறி வருகிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இந்த நிறுவனங்கள் உதவும்.


தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். ஆட்குறைப்பு செய்யாமல், எப்படி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது என்பது பற்றி, இந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவாக விவாதியுங்கள். உங்கள் கருத்துக்களை அரசிடம் தெரிவியுங்கள்.

இங்கு வருகை தந்த அனைத்து பிரதிநிதிகளுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மாநாடு வெற்றி பெற என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றினார்.