விடைத்தாள் திருத்துவதில் தவறுகள் நடக்கக்கூடாது: ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை

சென்னை:

மிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ்-1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.

இந்த நிலையில் விடைத்தாள் திருத்துவதில்  தவறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  அரசு தேர்வுத்துறை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக பள்ளிகள் தொடர்பான பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, தமிழகத்தில்,  மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவர்களின் விடைத்தாள்கள்  திருத்தும்  பணி 70  மையங்களில், மார்ச் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான விதிமுறைகளை அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதில் ,தேர்வில் பெற்ற மதிப்பெண்களை தேர்வுதாளின் முதல் பக்கத்தில் அதற்குரிய கட்டத்திற்குள் தெளிவாக எழுத வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

மேலும்,  விடைத்தாள் நகல் பெறுதல் , மறுகூட்டல் போன்றவற்றின் போது தவறு நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால்,  பணியில் மெத்தனமாக செயல்பட்டதற்காக, விடைத்தாளை திருத்திய ஆசிரியர்கள் மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.