மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கக்கூடாது! உயர்நீதி மன்றம் சவுக்கடி

சென்னை,

மிழகத்தில் மதுக்கடைகள் திறக்க ஏதுவதாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை, ஊரக மற்றும் நகர சாலைகளாக மாற்ற தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து திமுக, பாமக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அடுத்த 3 மாதங்களுக்கு கடைகளை திறக்க கூடாது என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறி உள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அகற்றக் கோரி உச்சநீதி மன்றம் கடந்த மாதம் தீர்ப்பு அளித்திருந்தது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில், 3,000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

அதையொட்டி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்றி, குடியிருப்பு பகுதிகளில் நிறுவ அரசு முயன்று வந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில். தமிழக அரசு, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் வரும்  சாலைகளாக மாற்றி உத்தரவிட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, திமுக, பாமக சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்தது,

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி  இந்திரா பானர்ஜி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது,  நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க முயற்சி செய்தே உள்ளாட்சி வசம் நெடுஞ்சாலைகள் ஒப்படைக்கபடுகின்றன என திமுக வழக்கறிஞர் வாதிட்டார்.

அப்போது வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர்,  நெடுஞ்சாலைகளை மாற்ற உத்தரவிட்ட சுற்றறிக்கையில் தவறு நடைபெற்றுள்ளதாக கூறினார். மேலும், டாஸ்மாக் கடைகளை மீண்டும் கொண்டுவர மாநில நெடுஞ்சாலைகளை நகர்ப்புற சாலைகளாக மாற்றவில்லை என்றும், தேசிய நெடுஞ்சாலைகளை மாற்றக்கோரி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தவறு உள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது. நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை ஜூலை 10ம் தேதி வரை திறக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது.