சென்னை:

தேர்தல் பிரசாரத்தின்போது கோடநாடு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்க்க மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் ஸ்டாலினுக்கு அறிவுறுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேடில் அவரது மறைவுக்கு பிறகு, கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக 5 பேர் மர்மமான முறையில் இறந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சயான், மனோஜ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையாயினர்.

இந்தநிலையில், கோடநாடு கொலை குறித்து, தகவல்கள் திரட்டி, ஆவணப்படமாக வெளியிட்டார் முன்னாள் தெகல்ஹா பத்திரிகை ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல். இந்த கொலை கொள்ளைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, இதுகுறித்து பேச சென்னை உயர்நீதி மன்றம் மேத்யூ சாமுவேலுக்கு தடை விதித்தது.

தற்போது தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலை வர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சியினர், கோடநாடு விவகாரம் குறித்து அதிமுகவை குற்றம் சாட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதற்கு தடை விதிக்கக்கோரி  சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம்,  அவதூறு வழக்கு நிலுவையில் இருப்பதால், அதுகுறித்து பேசுவதை ஸ்டாலின் தவிர்க்க வேண்டும் என்று கூறியது. மேலும், இதுகுறித்து ஏப்ரல் 3ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும்  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.