சென்னை:

கேரளா மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று சென்னை ஐஐடி நிர்வாகம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை ஐஐடியில் பயின்று வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தனது இறப்புக்கு, சில பேராசிரியர்கள் காரணம் என அவர் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்த நிலையில், கேரள அரசின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழகஅரசு தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.  மாணவி பாத்திமாக தற்கொலை சம்பவம் தொடர்பாக ஐஐடி பேராசிரியர்கள், மாணவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு விசாரணை காவல்துறையிடம் இருந்து மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாணவி பாத்திமா தற்கொலைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தரப்பில் இன்று ஐஐடி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில், சென்னை ஐஐடி தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், மாணவி ஃபாத்திமா தற்கொலை விவகாரத்தில் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது. மாணவி ஃபாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணை முடியும் வரை தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.

சென்னை ஐஐடி நிர்வாகம் தொடர்பாக வதந்திகளை சமூக ஊடகங்களிலும் அவதூறாக பரப்ப வேண்டாம். மாணவி மரணம் குறித்து ஐஐடி நிர்வாகத்துக்குத் தெரிய வந்ததுமே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சமூக ஊடங்களில் வெளியாகும் வதந்திகளால், நாட்டின் உயரிய கல்வி நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

ஐஐடி சென்னையில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் மனநலன் மற்றும் முழு உடல் நலனைப் பேண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.