கியூவில் நிற்க வேண்டாம்: கியூஆர் கோடு மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி: சென்னையில் அறிமுகமானது

சென்னை:

மிழகத்தில் கியூ ஆர் கோடு எனப்படும் டிஜிட்டல் முறையிலான  ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வசதி இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற ரயில்வே நிகழ்ச்சியில், ‘கியூ.ஆர்.கோடு’ மூலம் முன்பதிவற்ற ரெயில் டிக்கெட் எடுக்க புதிய வசதியை தென்னக ரயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் பிரியம்வதா தொடங்கி வைத்தார்.

இந்த வசதி மூலம்  பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள ‘ய.டிஎஸ்.-ஆப்’ மூலம் கியூஆர்.கோடை ஸ்கேன் செய்து உடனே முன்பதிவற்ற டிக்கெட் எடுக்க முடியும். இதற்கான  கியூ.ஆர்.கோடு’ உள்ள பதாகைகள் ரயில் நிலையங்களில் ஒட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய வசதி மூலம் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டருக்கு செல்லாமல் முன்பதிவற்ற டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்.

சமீபத்தில் ரயில்வே யுடிஎஸ் செயலி மூலம் மொபைலில் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை ஏற்படுத்தி இருந்தனர். இந்த நிலையில், தற்போது யுடிஎஸ் ஆப் மூலம் கியூஆர் கோர்டை ஸ்கேன் செய்து முன்பதிவில்லாத டிக்கெட்டுக்கள் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி முதற்கட்டமாக சென்னை புறநகர் ரெயில் நிலையங்களில் செயல்பட தொடங்கியுள்ளது. விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள  அனைத்து ரெயில் நிலையங்களிலும் விரிவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய வசதி முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால்,  டிக்கெட் கவுண்ட்டர்களுக்கு சென்று டிக்கெட் எடுக்கும் கால விரயம் தவிர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.