கடலூர்:

தொண்டர்கள் யாரும் தீக்குளிக்கக்கூடாது என்றும், எந்த நிலையிலும் எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனது கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகேள் விடுத்துள்ளது.

தேசதுரோக வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து,  அந்தகட்சியின் கட்சியை சேர்ந்த ஜெகன் என்பவர் தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர், குண்டடிபட்டோரை விசாரிக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை அங்கு செல்லவிடாமல் தூத்துக்குடி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி சிறைவைத்து, மறுநாள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்டதான பொய்வழக்கில் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

திட்டமிட்டுத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பழிவாங்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஈடாகத் துன்புறுத்தப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாத மன உளைச்சலில்தான் கடலூர் மாவட்டம், பெரியாண்டிக் குழி நிர்வாகி ஜெகன் தீக்குளித்திருக்கிறார். 80 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

அவரது இழப்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு அதிர்ச்சியையும் அளவுகடந்த துயரத்தையும் அளிக்கிறது. அவருக்கும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், சுற்றத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி! நம்மைத் தாக்கும் எந்த நிலையானாலும் அதனை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, இப்படிப்பட்ட முடிவை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் யாரும் எடுக்கக் கூடாது என்று கையெடுத்துக் கும்பிட்டு அவர்களைக் கேட்டுக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.