ஜாதி பற்றி பேசக்கூடாது: கமல்ஹாசன் ‘நறுக்’ பதில்

சென்னை:

ஜாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் அதுகுறித்து பேசக்கூடாது என்றும்,  என்னைப் பொறுத்தவரை அதை விளையாட்டாக கூட பயன்படுத்தக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவன தலைவர் கமல்ஹாசன் நறுக்கென்று பதில் கூறினார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருணாஸ் ஜாதி குறித்து பேசியதும், இன்று அதற்கு மன்னிப்பு கோரியதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கமல்,  கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது.  ஆனால்,  ஜாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் என்னைப் பொறுத்தவரை அதை விளையாட்டாக கூட பயன்படுத்தக்கூடாது.  ஜாதியைப் பற்றி பேசும் காலம் முடிந்து விட்டது. என்னைப் பொருத்தவரை அதைப்பற்றி பேசவே கூடாது. கருணாஸ் அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்றார்.

மேலும் இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு,  எந்த தேர்தலாக இருந்தாலும் ஆயத்தம் இல்லாமல் எதையும் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை உள்ளவன் நான். அது உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி. ஆயத்தம் இல்லாமல் செய்யக்கூடாது என்பதால் தான் எங்களுடைய பயிலரங்க தேதியை மாற்றி இருக்கிறேன்.

உள்ளாட்சி தேர்தல் வரும்போது அதைப் பற்றி பேசலாம். இவர்கள் நடத்தும் தேர்தலை வேடிக்கையாகத் தான் பார்க்க வேண்டும் என்றார்.

மேலும்,  நான் மக்களை சந்திக்க கிராமங்களுக்கு சென்றேன். அங்கு நாங்கள் நடத்தும் கூட்டத்துக்கு அனுமதி எளிதாக கிடைக்கவில்லை. அதனால் இடங்கள் மாற்றப்பட்டது. மேடை அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.