பொறுமையை சோதிக்க வேண்டாம்! மணல் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை:  மணல் கடத்தல் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை, பொறுமையை சோதிக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில், விதிகளை மீறி மணல் கடத்துவது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டும், அது தொடர்பாக நீதிமன்றமும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி, மணல் விற்பனையை நெறிப்படுத்த பல உத்தரவுகளை வழங்கி உள்ளது. ஆனால், தமிழகஅரசு நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல், மணல் கடத்தல் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வரகிறது.

இந்த நிலையில், தூத்தூக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சிவலூரைச் சேர்ந்தவர் உடன்குடி தாலுகா பகுதியில் மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நடைபெற்றது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைமைச் செயலர், தொழில் துறை முதன்மைச் செயலர், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர், நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலரை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகத்தில் மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? வழக்குகளின் விசாரணை நிலை என்ன? என்பது உள்ளிட்டவை குறித்து பதில் தாக்கல் செய்ய தூத்துக்குடி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என எச்சரித்து  வழக்கை செப்டம்பர் மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.