அய்யப்பன் இருக்கும் இடத்தை போர் சூழல் போல மாற்றி விட வேண்டாம்: கோயில் தலைமை அர்ச்சகர் வேண்டுகோள்

பம்பா:

அய்யப்பன் இருக்கும் இடத்தை போர் சூழல் போல மாற்றி விட வேண்டாம் என்று கோயில் தலைமை அர்ச்சகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள அய்யப்பன் கோயில் பூஜை காலம் முடியும் வரை திறந்திருக்கும்… மூட மாட்டோம்; ஆனால் பெண்கள் வரக்கூடாது என்று சபரிமலை அய்யப்ன் கோயில் தலைமை அர்ச்சகர் கண்டாரு ராஜீவாரு தெரிவித்து உள்ளார்.

அய்யப்பன் கோயில் இருக்கும் இடத்தில் கலவர சூழல் நிலவுவது வருத்தம் அளிக்கிறது, என்றும், இந்த இடத்தை யாரும் போர் சூழல் போல மாற்றி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றும்  தலைமை அர்ச்சகர் கண்டாரு ராஜீவாரு அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், பெண்கள் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து, கோவில் நடை மூட வாய்ப்புள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில், கோயிலின் தலைமை அர்ச்சகர் கண்டாரு ராஜீவாரு கூறும்போது, ‘கோயிலை மூடும் எண்ணம் இல்லை, ஆனால் பெண்கள் வரக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார். மேலும்,  ‘நாங்கள் எப்போதும் கோயிலை மூடி விடுவோம் என்றெல்லாம் சொல்லியதே இல்லை. மாதாந்திர பூஜையை ஐயப்பனுக்கு செய்வது எங்கள் கடமை. அதிலிருந்து நாங்கள் விலக மாட்டோம். அந்த பாரம்பரியத்தை நாங்கள் உடைக்க மாட்டோம்.

நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கின்றோம். அதே நேரத்தில் ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கைகளையும், கோயிலின் வழக்கத்தையும் மதித்துப் 10 முதல் 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் வர வேண்டாம் என்பதையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஐயப்பன் கோயில் இருக்கும் இடத்தில் கலவர சூழல் நிலவுவது வருத்தம் அளிக்கிறது. இந்த இடத்தை யாரும் போர் சூழல் போல மாற்றி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.