பா.ரஞ்சித்தைத் திட்டாதீங்க!: நெட்டிசன்களுக்கு “அறம்” கோபி வேண்டுகோள்

கோபி நயினார் – பா.ரஞ்சித்

யக்குநர் கோபி நயினார் பெயரைக் குறிப்பிடாமல், “அறம்” படத்தை வாழ்த்தி இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்ட ட்விட், பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், “ சமூக வலைதள பதிவர்கள் ரஞ்சித்தை கடுமையாக விமர்சிக்க வேண்டாம்” என்று இயக்குநர் கோபி நயினார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அறம்’. படம் சிறப்பாக இருப்பதாக பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.

இந்த நிலையில் இயக்கநர் பா.ரஞ்சித், “அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி. கற்பி ஒன்று சேர் போராடு. இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கும் தோழர் நயன்தாராவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இயக்குநர் கோபி நயினார் பெயரைக் குறிப்பிடாமல் வெளியிட்டதால், பா.ரஞ்சித்தை சமூகவலைதளங்களில் பலரும் சாடி வருகிறார்கள்.

மேலும், பா.ரஞ்சித் இயக்கிய முதல் படமான “அட்டகத்தி” மற்றும் இரண்டாவது படமன “மெட்ராஸ்” ஆகியவை இயக்குநர் கோபி நயினார் தயாரித்து வைத்திருந்த கதைகளில் இருந்து திருடப்பட்டது என்ற புகார் ஏற்கெனவே உண்டு. இதில் மெட்ராஸ் படம் குறித்து கோபி நயினார் நீதிமன்றத்திலும் வழக்க தொடர்ந்துள்ளார்.

இதையும் குறிப்பிட்டு, நெட்டிசன்கள் பலர் பா.ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது கோபி நயினார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர், “இயக்குனர் ரஞ்சித்தும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கி பயணிக்கிறோம். ஆனால் சில நலவிரும்பிகள் அன்பின் மிகுதியால் தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு  வருகின்றனர். இது ஆரோக்கியமான விசயம் அல்ல.

தோழர்களே! படைப்பிற்கான விமர்சனங்களை வரவேற்கிறேன்.

நானும், இயக்குனர் ரஞ்சித்தும் இந்த சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும், கடமைகளும் ஏராளம் இருக்கின்றன.  அதில் குறிப்பாக நாங்கள் இருவரும் ஒருமித்து செயல்பட வேண்டியது கட்டாயமும் கூட. அப்போது தான் இந்த பலம் எல்லோரையும் ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமையக் கூடும்.

ஆதலால் உறவுகளை சிக்கல் ஆக்குகின்ற எந்தவொரு பதிவுகளையும் நான் அனுமதிக்க மாட்டேன். நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவேதனையைத் தந்திருந்தால் அவர்களுக்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று கோபி நயினார் தெரிவித்துள்ளார்.