டில்லி:

தேசபற்றை எடுத்துக் காட்ட சினிமா தியேட்டர்களின் மக்கள் எழுந்து நிற்க வேண்டுமா? என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

தேசிய கீதம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் சந்திராசுத், கான்வில்கர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் வக்கீல் வேணுகோபால் வாதிடுகையில், ‘‘பிரிவினை நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒளிபரப்புவது அவசியம்’’ என்றார்.

சினிமா துறை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.யூ.சிங் வாதிடுகையில், ‘‘தற்போது நீதிமன்றம் ஏன் இந்த விஷயத்தில் தலையிடுகிறது?. 2005ம் ஆண்டில் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது’’ என்றார்.

நீதிபதி சந்திரசுத் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற உத்தரவை அடிப்படையாக கொண்டு தேசிய கீதத்திற்கு ம க்கள் நிற்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இதற்கு வரும் ஜனவரி மாதம் வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. பொழுதுபோக்கிற்காக தான் மக்கள் சினிமாவுக்கு செல்கிறார்கள்.

இந்த சமூகத்திற்கு பொழுதுபோக்கு வேண்டும். அங்கு ஒழுக்க கொள்கை தேவையில்லை. தேசபற்றை நிரூபிக்க சினிமா தியேட்டர்களில் மக்கள் எழுந்து நிற்க வேண்டுமா?. ஒழுக்க கொள்கை என்பது எங்கே நிற்க வேண்டும் என்பது தான் கேள்வி. தேசிய கீதத்தை அவமதிக்கும் என்பதால் சினிமா தியேட்டர்களுக்கு மக்கள் டி சர்ட், சார்ட்ஸ் அணிந்து செல்லக் கூடாது என்று அரசு கூறலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக இந்த உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மறுஆய்வுக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 9ம் தேதி நடக்கிறது.