நெட்டிசன்:

சமூக ஆர்வலர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவு:

மிதிவண்டியின் பின் இருக்கையில், கையில் அரிக்கேன் விளக்குடன் காமரஜர் பயணிக்கும் புகைப்படம் மிகப் பிரபலம். ஆனால் மிதிவண்டியை ஓட்டும் மனிதரை பலருக்குத் தெரியாது.

அவர்.. ரா.கிருஷ்ணசாமி நாயுடு.

இந்த அரிய புகைப்படம் எடுக்கப்பட்டது  தொம்பகுளம் கிராமத்தில் எடுக்கப்பட்டது.

சுதந்திரப்போராட்ட காலத்தில் கிராமப்புறங்களில் பிரச்சாரத்துக்குச் செல்ல இப்படித்தான் சைக்கிளில் சென்று, கையில் வைத்துள்ள பெட்ரோமாஸ் விளக்கை எரியவிட்டு, விடிய விடிய கிராமங்களில் காமராஜரும், ரா.கிருஷ்ணசாமி நாயுடுவும் மக்கள் கூட்டங்களுக்கு மத்தியில் பேசுவது உண்டு.

இந்த இருவர் மற்றும் மடத்துப்பட்டி கோபால் நாயக்கர், சாத்தூர் சங்கிலி , எஸ்.ஆர்.நாயுடு போன்றோர்கள், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, சங்கரன்கோவில் வரை அக்காலத்தில், அருகாமை என்றால் சைக்கிளிலும், தொலைவாக இருக்குமென்றால் மாட்டுவண்டியிலும் கூட்டங்கள் செல்வது வாடிக்கை. இப்போதுபோல கார் வசதி, சாலை வசதிகளெல்லாம் அப்போது கிடையாது.

சுதந்திரப்போராட்டகாலத்தில், ஒன்றுபட்ட நெல்லைமாவட்டத்திலும், சாத்தூர், இராஜபாளையம், சிவகாசியை ஒட்டிய பகுதியிலும், பெருந்தலைவர் காமராஜர், சோமையாஜுலு, கிருஷ்ணசாமி நாயுடு, மதுரகவி பாஸ்கரதாஸ், விஸ்வநாத தாஸ், தினமணியின் ஆசிரியராக இருந்த டி.எஸ்.சொக்கலிங்கம் கே.டி.கோசல்ராம் போன்றோர்கள் சுதந்திர வேட்கையினை மக்களிடம் பரப்ப இப்படத்தில் பார்ப்பது போல பிரச்சாரக் கூட்டங்களுக்கு பயணம் செய்வது வாடிக்கை.

எந்த கிராமத்தில் கூட்டம் முடிகிறதோ, அங்கேயே கிடைப்பதை சாப்பிட்டு விட்டு, படுத்து உறங்கி, மறுநாள் ஊர் திரும்புவார்கள். பெருந்தலைவர் காமராஜரைப் பற்றிய செய்திகள் நாடறிந்ததே. அவரோடு சைக்கிள் ஓட்டிச் செல்லும் ரா.கிருஷ்ணசாமி நாயுடுவைப் பற்றிச் சொல்லவேண்டும்.

ரா.கிருஷ்ணசாமி நாயுடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புது.ராமச்சந்திரபுரம் (சென்னாகுளம் ) கிராமத்தில் 1902 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வி பயின்று, பின் பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார். இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர். 1922-ல் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தார்.

1930 இல் சட்டமறுப்பு இயக்கம், 1940 இல் தனிநபர் சத்தியாக்கிரகம்,
1942 இல் ஆகஸ்ட் இயக்கம் ஆகியவற்றின் போது சிறைக்குச் சென்றார்.

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968 முதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924 ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் உயர்ந்தார். கூட்டுறவு அமைப்புகளில் பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்த்து , கிராமங்களில் அதனை வளர்த்தெடுத்தார்.

1926ல் தனது கிராமம் பி.ராமசந்திரபுரத்தில் சேலம் பெ. வரதராஜுலு நாயுடு அவர்கள் தலைமையில் தேசிய காங்கிரஸ்மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தினார். இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜர் இருந்தபோது, ரா.கி செயலாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார்.

1959 முதல் 1962 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், 1962 முதல் 1967 வரை அதன் தலைவராகவும் இருந்தார். 15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராகப் பதவி வகித்தவருக்கு சொந்தமாக ஒரு வாகனம் கூட இருக்கவில்லை. மக்களுடன் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்வார்.

வினோபா பாவே பூமிதானக் கொள்கைக்காக ஏழை ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர்களுக்கு தனது சொந்த நிலத்தைத் தானமாக வழங்கினார்.

தென்மாவட்ட மக்கள் யாரேனும் ஏதாவது உதவி வேண்டுமென்று சென்னைக்கு தன்னைப் பார்க்கவந்தால் “ஏன் செலவு செய்து இங்கே வந்தாய், சாப்பிட்டாயா, ஒரு போஸ்ட் கார்டு எழுதினா நான் உதவி செய்யமாட்டேனா” என்று சொல்வார்.

நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, உறுதிபட உதவுவார். பகட்டும் பந்தாவுமில்லாமல் எளிமையாக சென்னையில் எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருப்பார். தன்னுடைய துணிமணிகளை தானேதுவைத்து உடுத்திக்கொள்வார்.

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது, மதிய உணவுத்திட்டத்தை பாரதி பிறந்த எட்டையபுரத்தில் முதன்முதலில் துவக்கி வைத்ததற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் இருந்தது.

அதாவது, முற்காலத்தில் எட்டையபுரம் பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபொழுது, எட்டப்ப மன்னர் அப்பகுதி மக்களுக்கு மூன்றுவேளையும் உணவு கொடுத்து மக்களை பசியில் வாடாமல் காப்பாற்றினார். அதனை நினைவு படுத்தும் வகையில் எட்டையபுரத்திலே மதிய உணவுத்திட்டத்தைத் துவக்கிவைக்க, கோரிக்கை வைத்தவர் ரா. கிருஷ்ணசாமி நாயுடுவும்,
தந்தை பெரியாரின் அன்புக்குரிய என்.டி.சுந்தர வடிவேலும் ஆவார்.

ஒன்றுபட்ட இராமநாதபுரத்தில், விருதுநகருக்கு மேற்குப்பகுதியிலும், (இன்றைய விருதுநகர் மாவட்டம்) ஒன்றுபட்ட நெல்லைமாவட்டத்திலும் , சங்கரன்கோவில், கோவில்பட்டி வட்டாரங்களில், ஆரம்ப பள்ளிகளையும், கிராமங்களில் தெருவிளக்குகளையும், விவசாய பம்புசெட்டுகளுக்கு மின்வசதிகள் என அடிப்படை வசதிகளைப் பெற்றுத்தந்ததில் கிருஷ்ணசாமி நாயுடுவுக்கும். எஸ்.ஆர் நாயுடுவுக்கும் பெரும்பங்கு உண்டு.

விவசாயிகள் பிரச்சனைக்காக, #இராஜபாளையம், #திருவில்லிப்புத்தூர் நகரங்களிலும் இவர் போராட்டங்கள் நடத்தியதுண்டு. திருவில்லிப்புத்தூர் வட்டாரமே பயன்பெறும் வகையில் அழகர் அணைத்திட்டத்தை அமைக்கவேண்டுமென்று தன் வாழ்நாளிலே விரும்பினார். ஆலங்குளத்தில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் ஆலை நிறுவப்படுவதற்கு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் காமராஜரிடம் வலியுறித்தியதும் இவரே.

#ராகி என்ற (ஆங்கிலத்தில் #ஆர்கே) கிருஷ்ணசாமி நாயுடு நேர்மையான, எளிமையான, பண்பான அரசியல் தலைவராக தனது இறுதிமூச்சு வரை வாழ்ந்தார். காந்தியாருக்கு நிர்வாக ரீதியாக உதவியாக இருந்த குமரப்பா, தேனி.என்.ஆர். தியாகராஜன், ஆகியோர்களோடு தொடர்ந்து நெருக்கமாக இருந்தார்.

#காமராஜருக்கு தன் சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளக்கூடிய நண்பனாகவும், தோழனாகவும் இருந்தவர் ஆர்.கே. தன்னுடைய 72வது வயதில் அக்டோபர் 30, 1973 அன்று காலமானார். அவரது மறைவு குறித்து கவியரசு கண்ணதாசன் எழுதிய இரங்கற்பா.

“நாணய விளக்கே ! ஓயா நற்பணிக் குன்றே ! என்றும்
ஆணவமில்லா வேந்தே !
அயர்வில்லா தேசபக்தி.
நீணெடுங்காலம் கொண்டோய் !
நீ எமை விட்டுச் சென்று
நாணடந்தாலும் நாங்கள்
நாளெல்லாம் நினைப்போம் உன்னை.”

ஆர்.கேவுக்கு நினைவுபடுத்தும் வகையில் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவரான மறைந்த இராமானுஜம் போன்றவர்கள் திருவில்லிப்புத்தில் ரா.கி பவனம் என்று ஒரு மார்பளவு சிலையை நிறுவியுள்ளனர்.

1960 காலகட்டங்களில் ரா.கி அவர்களைப் பலமுறை பார்க்கக்கூடிய வாய்ப்புகள் அமைந்தன. அவர் செய்த தொண்டுகளும், உழைப்பும் வரலாறாக பலரையும் சென்றடையவில்லையே என்ற வருத்தங்கள் என்போன்ற பலருக்கும் உண்டு.