“பன்றிக்கு பூணூல் அணிக்கும் போராட்டம்” என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது “தந்தை பெரியார் திராவிடர் கழகம்”. சமூகவலைதளங்களில் தற்போது இது குறித்த விவாதங்கள்தான் அதிகமாக நடந்துகொண்டிருக்கின்றன.

“பன்றிக்கு பூணூல் அணிவிப்பதாக அறிவித்து கேவலப்படுத்துகிறார்கள்” என்று ஒரு பக்கம் ஆதங்கப்படுகிறார்கள் சிலர்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.  விஷ்ணுவின் 22 அவதாரங்களில் ஒன்றான வராக (பன்றி) அவதாரம் பற்றி தெரிந்துகொள்வோம்.

விடுதலை நாளிதழில் சு. அறிவுக்கரசு எழுதிய  “புராணங்களைப் புரிந்து கொள்ளுங்கள்!” என்ற தொடரில் இருந்து…

“இந்தப் பன்றிக்குத் தனியே ஒரு புராணமும் உண்டு. அவதாரங்களில் அய்ந்திற்கு மட்டும் புராணங்கள் உண்டு. அதில் ஒன்று பன்றிப் புராணம். பிரளய காலத்தில் இருட்டில் இருந்த உலகை பன்றிதான் உயர்த்தி வெளிக் கொண்டு வந்ததாம். புராணம் கூறுகிறது.

இந்தப் பன்றியின் நான்கு கால்களும் நான்கு வேதங்களாம். நாக்கு அக்னியைப் போன்றதாம்; அதாவது நெருப்பு. அதன் மயிர்கள் தர்ப்பைப் புல்களாம். தலை பிரம்மாவாம். பன்றியின் இரண்டு கண்கள்தாம் இரவும் பகலுமாம்.

வராகத்தின் காதணிகள் ஆறு வேதங்கங்களாம்.

நாசித்துவாரங்கள் நெய்யாம்.

பன்றியின் குரல் சாமவேதத்தின் துதிகள் போன்றதாம்.

வேத கோஷத்தைச் செக்காடும் இரைச்சல் என்றார் புரட்சிக் கவிஞர் புராணமோ பன்றியின் குரல் என்றே கூறிவிட்டது. பலே!

பன்றியின் உருவமே யாகம் போன்றதாம்.

சாமஸ்ருதிகள் போன்றவை அதன் குடல்களாம்.

அதன் ஆண் பெண் குறி இருக்கிறதே, அது நெய்யை ஆகுதி செய்வதற்குச் சமமாம்; அவ்வளவு புனிதம். யாக மந்த்ரங்கள் போன்றவையாம்

பன்றியின் எலும்புகள். சோமபானம் போன்றதாம்

பன்றி ரத்தம். பன்றியின் உடலில் அடிக்கும் கப் (நாற்றம்) இருக்கிறதே, அது அவாளுக்கு யாக நைவேத்யத்தின் நறுமணமாம் (சகிக்கலை; யாக நாற்றம் பன்றி நாற்றம் போன்றதாம். பக்கத்தில் உட்கார்ந்து எப்படித்தான் யாகம் செய்கிறார்களோ?)

யாகத்தில் உச்சரிக்கப்படும் வேதங்கள் வராகத்தின் உதடுகளாம்.

வேதம் எவ்வளவு அழகியது என்பது புரிகிறதா?

இப்படிப் பலப்பல உறுப்புகள், அசைவுகளுக்கு அர்த்தம் கற்பிக்கிறது. வராக புராணம். படைப்பு பற்றி இந்தப் புராணம் கூறுகிறது. படியுங்கள்

சிருஷ்டி 1) ஆதி 2) மூல சிருஷ்டி `சர்க்கம் எனப்படும். 2) அடுத்து பிரளயத்தால் ஏற்படும் அழிவும். அதன் பின் படைக்கப்படும் படைப்பு. இது `பிரதி சர்க்கம் எனப்படும்.

பிருதிவி பெரிய மனக் குழப்பத்துடன் விஷ்ணுவை அடைந்து `ஒவ்வொரு கல்ப முடிவிலும் எனக்கு நீர் ரக்ஷகன் ஆகிறீர். நீர் என்னைக் காத்து, அளித்து, புனர்நிர்மாணம் செய்கிறீர். எனினும் உங்களுடைய முழு சக்தியை நான் அறியேன். உமது அடையாளமும் நான் அறியேன். உங்களது அதிசயங்களைத் தெரியச் செய்வீர். உம்மை அடைவது எப்படி?

சிருஷ்டியின் தோற்றமும், முடிவும் எவ்வாறு நிகழ்கிறது? நான்கு யுகங்களின் குண நலன்கள் எத்தன்மையதாகும்? என்று பிருதிவியாகிய பூமாதேவி கேட்க, வராக (பன்றி) அவதார விஷ்ணு அய்யப்பாடுகளை நீக்கும் விதத்தில் விடைகள் தந்தார்.

வராகம் (பன்றி) ஒரு மாயச் சிரிப்பு சிரித்தது.

பிருதிவி பிரம்மாண்டம் (முட்டை) தேவர்கள், உலக மன்னர்கள் ஆகியவற்றை அந்த வராகத்தின் வயிற்றில் கண்டாள். அவள் விஷ்ணுவை மனமாரத் துதிக்க அந்த வராகப்(பன்றி) பெருமான் பூதேவி வினாக்களுக்கு விடை அளிக்கலானார்.

`பரமாத்மனிலிருந்து எல்லாம் தோன்றியது பற்றியும், மூன்று குணங்கள், அய்ந்து இயற்கைச் சக்திகளாகிய நிலம், நீர், தீ, காற்று, விண் பற்றியும், பூச்சியத்திலிருந்து தோன்றிய உலகைப் பற்றியும் விவரித்தார்.

பிரம்மாவின் நாள் ஒரு கல்பம். அப்படி பல கல்பங்கள் முடிய தற்போது வராக கல்பம் நடைபெறுகிறது. இந்தக் கல்பத்தில்தான் விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்தார்.

இதுவரையில் சிருஷ்டியின் மூலப்பகுதி `சர்க்கம்.
அடுத்து, பிரம்ம சிருஷ்டி தொடங்கி நடைபெறுகிறது. அது `பிரதி சர்க்கம் எனப்படும்.

விஷ்ணு தன் யோகு துயில் நீங்கி கண்விழித்து ஒன்பது நிலைகளில் உலகைப் படைத்தார்.

தமஸ், மோகம், மகாமோகம், தமிஸ்ரம், அந்தத்தமிஸ்ரம் என அய்ந்து பகுதிகள் தோன்றின. இது `பிராகிருத சர்க்கம் ஆகும்.

அடுத்து படைப்பு நாகம் (கம் = போதர்; நா = எதிர்மறை) எனவே அசையாத மரங்கள், மலைகள் படைக்கப்பட்டன.
இவை அசையாதன ஆனால் வளர்வன. இது `முக்கிய சர்க்கம் ஆகும்.

அடுத்து வளைவாக எழுதலும், வீழ்தலுமான படைப்பு ஏற்பட்டது. பறவைகள் போன்றவை தோன்றின. இவை `திரபதயோனி படைப்பு எனப்பட்டது.

மற்றும், பல சர்க்கங்களில் தேவர்களும், மனிதர்களும், அசுரர்களும் தோன்றினர். தேவர்கள் அன்பும், மகிழ்ச்சியும் கொண்டார்கள். மனிதர்கள் புறப் பொருள்மீது பற்று கொண்டவர்கள், அடிக்கடி மகிழ்ச்சி இழப்பவர், சில சமயம் தீயவர்கள், ஆசை மிக்கவர், நல்லவை உடை யவர், அசுரர்கள், அமைதியற்றவர், சண்டை போடுபவர்கள், கொள்ளை, கொலை புரிபவர்கள்.

இவ்வாறு ஆதியில் விஷ்ணு சிருஷ்டித்தது `சர்க்கம் என்றும் பிரம்மாவின் மூலம் படைக்கப்பட்டது `பிரதி சர்க்கம் என்றும் அறிய வேண்டும்.

பூமி பாதாளத்தில் ஆழ்த்தி விட்டதாம். எப்படி? புராணத்தில் கூறப்படும் கதையைப் படிக்கலாம்.

பிரஜாபதிகளில் காசியப முனிவரும் ஒருவர். அவருடைய மனைவியரில் ஒருத்தி திதி. அவள் ராக்ஷசர்களின் தாய். ஜயவிஜயர்கள் அவள் வயிற்றில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு என்ற இருவர் களாய் உதித்தனர். அவர்களில் இளையவன் ஹிரண்யாக்ஷன்.

அவன் பிரம்மாவைக் குறித்துக் கோர தவம் செய்தான். அதன் வெப்பம் மூன்று லோகங்களையும் தகித்தது. இதனால் அச்சம் கொண்ட தேவர்கள் சத்திய லோகம் சென்று பிரம்மாவைக் கண்டு இரண்யாக்ஷன் தவம் பற்றிக் கூறித் தங்களுக்கு அருள் புரிய வேண்டினர்.

அப்போது பிரம்மா தான் சென்று இரணியாக்ஷன் தவத்தை முடிக்கச் செய்வதாகவும், தேவர்களை ரக்ஷிப்பவனாகவும் இருப்ப தாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் இரணியாக்ஷன் தவம் செய்யுமிடம் அடைந்து அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு அவன் சிருஷ்டியில் தோன்றிய யாராலும், எதனாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக் கூடாது. தனக்கு மூவுலகத்திற்கும் அதிபதியாகும் வரங்கள் இரண்டும் வேண்டினான். அப்போது பிரம்மா விஷ்ணுவைத் தியானித்து எல்லாம் அவன் செயலே என்று நினைத்து அரக்கன் கேட்ட வரங்களைக் கொடுத்தார்.

வரம் பெற்ற இரணி யாக்ஷன் மூவுலகங்களையும் வென்று தனக்கு எதிரி யாருமின்றி ஆளத் தொடங்கினான். அடுத்து அவன் சத்தியலோகம் அடைந்து பிரம்மனை வெல்ல முயன்றபோது யுக்தியுடன் அவனைச் சமாதானப்படுத்தி உலக நாயகனாகிய விஷ்ணுவை வென்றால் உனக்குச் சமமாக யாரும் இருக்க மாட்டார் என்று கூற விஷ்ணுவின் இருப்பிடம் அடைந்தான் இரணியாக்ஷன்.

அங்குத் துவாரபாலகர்கள் அவனைத் தடுக்கவில்லை. அவன் வருகை அறிந்து விஷ்ணு பாதாளலோகம் சென்று விட்டார். இரணி யாக்ஷன் வைகுந்தத்தில் அனைவரும் விஷ்ணு ஸ்வரூபியாகக் காணப்பட்டனர்.

செய்வதறியாமல் விஷ்ணுவைத் தேடி பாதாளலோகம் செல்ல முனைந்தவன் வழி தெரியாமல் தவித்து இறுதியில் தனக்குத் தடையாயிருக்கும் பூமியைப் பாயாகச் சுருட்டி மறைந்தது.

அது கண்டு எல்லோரும் ஸ்ரீ ஹரியிடம் முறையிட்டனர். பூமாதேவி கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்தாள்.

உடனே பகவான் விஷ்ணு யஜ்ஞ வராகமாக (பன்றி) உருவெடுத்தார். குர்குர் என்று சப்தம் செய்தது வராகம்(பன்றி) .

பூமியைப் பாயாகச் சுருட்டிய இரணி யாக்ஷன்மீது பாய்ந்து தன் தந்தத்தால் (கோரைப் பல்லால்) குத்தினார். அவன் அதைத் தாளமுடியாமல் சமுத்திரத்திலே குதித்து மறைந்தான்.

அவனை வராகம் (பன்றி) தனது கால்களால் பற்றிக் கொண்டு மறுபடியும் தந்தத் தால் குத்தியது. அதனால் அவன் உடனே மரணமடைந்தான்.

அவனால் சுருட்டப்பட்ட பூமியை வராகமூர்த்தி(பன்றி) வெளிக் கொணர்ந்து அதனை நிலைப்படுத்தி வைகுண்டம் அடைந்தார். இதுவே `வராக (பன்றி) அவதாரம்.

(நன்றி:  சு. அறிவுக்கரசு. “புராணங்களைப் புரிந்து கொள்ளுங்கள்!” தொடர், விடுதலை நாளிதழ்)