54 வயது ஒப்பந்ததாரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று முன் தினம் இரவு அவர் உடல்நிலை மோசம் அடைந்தது.


இது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அடிக்கடி தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இறந்த செய்தியும் அமைச்சருக்கு சொல்லப்பட்டது.

அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அதிகாலை 2 மணிக்கு , கொரோனாவால் ஒப்பந்ததாரர் இறந்த செய்தியை பதிவிட்டதும், அவர் இறுதி சடங்கு ஏற்பாடுகள் – மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டன.

உயிர் இழந்தவர் கொரோனா நோயாளி என்பதால் சூரிய உதயத்துக்கு முன்பாக( மத வழக்கப்படி) அவர் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

குடும்பத்தினர் யாரும் அவர் உடம்பை தொட அனுமதிக்கபடவில்லை. இறந்தவரிடம் இருந்து, கொரோனா தொற்றி கொள்ளாமல் இருக்க -உடம்பு முழுக்க கவச உடை அணிந்த சிலர் , ஒப்பந்ததாரரின் உடலை அதிகாலையில் மேகமலையில் உள்ள இடுகாட்டுக்கு எடுத்து சென்றனர்.

அங்கு உடல் குளிப்பாட்டபட்டு, வாசனை திரவியங்கள் பூசப்பட்டன. 6 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டு, காலை 4.30 மணிக்கு அவர் உடல் புதைக்கப்பட்டது. உறவினர்கள் 4 பேரும், காவலர்கள் 4 பேரும் மட்டுமே அப்போது உடன் இருந்தனர்.