டெல்லி:

பாகிஸ்தானில் இருந்து விரட்டப்பட்டு, டெல்லியில் தஞ்சம் புகுந்துள்ள இந்து அகதிகள், சிஏஏக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளனர்.  எங்களது வலி தெரியுமா? எங்களது உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள் என்று குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களை நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டெல்லியில் அகதிகளாக உள்ள பாகிஸ்தான் இந்துக்கள்

குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின், அதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே வேளையில் சில பகுதிகளில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து விரட்டப்பட்டு டெல்லியில் தஞ்சம் புகுந்துள்ள பாகிஸ்தான் சிறுபாண்மையின மக்கள், தங்களது உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள் என்று  பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கூறியுள்ள டெல்லியில் வாழும் பாகிஸ்தானைச் சேர்ந்த  இந்துவான மீரா தாஸ் என்பவர், ‘பாகிஸ்தானில் இருக்கும் எங்கள் வீடு, நிலம் உள்ளிட்ட அனைத்து உடைமைகளையும் விட்டு இங்கு வந்துவிட்டோம். தற்போது இதுதான் எங்கள் வீடு. நீங்கள் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் எங்கு செல்வோம்? தயவுசெய்து எங்கள் வலியை புரிந்து கொள்ளுங்கள். எங்களுக்கு ஏற்பட்ட காயங்களை போக்குங்கள். இந்த சட்டத்துக்கு எதிராக போராடாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் எங்களை  உடைமைகளை இழந்து 2011-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தோம் என்றும்,  பாகிஸ்தானில் நாங்கள் பட்ட கஷ்டம்,  ‘நாங்கள் தாங்கிய வலிகளை நீங்கள் எதிர்கொண்டிருந்தால் ஒருபோதும் போராட மாட்டீர்கள். எங்களது உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள்… இந்த சட்டம் எங்களுக்கு ஒரு புது வாழ்க்கையை வழங்குகிறது என்று தெரிவித்து உள்ளனர்.