வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை உருவான வரலாறு தெரியுமா?

நெட்டிசன்:

(வாட்ஸ்அப்)

தமிழ் நாட்டில், திண்டிவனம் என்ற நகரை எல்லோரும் அறிந்திருப்பார்கள். அந்த நகரில் ஒரு இரவு பொழுது மின்சாரம் இல்லாத காலம்.,

வருடமோ 1890. அந்த கிறிஸ்தவ மிஷின் பங்களாவில், சிம்னி விளக்குவெளிச்சத்தில், 20 வயதான அமெரிக்க நங்கை ஆங்கில நாவல் படித்துக் கொண்டிருந்தாள். அவளின் பெயர் :ஐடா சோபியா ஸ்கட்டர்.

அமெரிக்காவில் கிறிஸ்தவ இறை பணி செய்ய பயிற்சியும் பெற்ற இவளது தந்தை ஜாண் ஸ்கட்டர், திண்டிவனத்தில் மருத்துவ சேவையையும், இறை பணியும் செய்து வந்தார். தந்தையை பார்க்க திண்டிவனத்துக்கு ஐடா சோபியா ஸ்கட்டர் வந்திருந்த போதுதான், இரவு நேரத்தில் அந்த சோக காட்சிகள் அரங்கேறின….

ஐடா ஸ்கட்டர், நாவல் புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்த போது, தலையில் குல்லா அணிந்திருந்த ஒரு இஸ்லாமியர் ஓடி வந்து, கதவை தட்டினார்.

கதவை திறந்த போது அந்த இஸ்லாமியர்,”எனது மகளுக்கு இது தலை பிரசவம்., அவள் பிரசவ வேதனையால் துடிக்கிறாள்., அவளுக்கு பிரசவம் பார்க்க நீங்கள் வாருங்கள்” என்று கதறினார்.

இதனை கேட்ட ஐடா ஸ்கட்டர், “ நான் டாக்டர் அல்ல., எனது தந்தையார்தான், மருத்தவர். உங்கள் மகளுக்கு பிரசவம் பார்க்க, எனது தந்தையை அனுப்புகிறேன்” என்று கூற, அந்த இஸ்லாமியரோ,” எங்கள் மத வழக்கத்தின் படி, ஒரு பெண்ணின் பிரசவத்தை, ஒரு பெண்தான் பார்க்க வேண்டும்” என்று கூறி மறுத்து விட்டு,வெளியேறினார்.

சிறிது நேரத்தில், அந்த இஸ்லாமியரின் மகள், பிரசவத்தில் இறந்து விட்டார் என்ற தகவலை கேட்ட ஐடா ஸ்கட்டர் மிகுந்த வேதனை அடைந்தார்.

இது போல, ஒரு இந்து கர்ப்பிணி பெண்ணுக்கு, ஆண் மருத்துவரான ஐடா ஸ்கட்டரின் தந்தையை பிரசவம் பார்க்க அனுமதிக்காததால், அந்த பெண்ணும் இறந்து போனாள். இந்த சம்பவமும் ஐடா ஸ்கட்டரின் மனதில் மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியது.

இப்படியாக ஏராளமான இஸ்லாமிய பெண்களும், இந்து பெண்களும், “ பிரசவத்தினை, ஆண் மருத்துவர்களை பார்க்க அனுமதிப்பது இல்லை., பெண் மருத்துவர் மட்டுமே பார்க்க வேண்டும்” என்ற ஒரே காரணத்தினால் இறந்து போனார்கள். இதனால், ஐடா ஸ்கட்டர் அமைதி இழந்து போனார்.

ஒருநாள் இரவில் அவரின் உள் மனதில் தோன்றிய உள்ளொளி,” நீ டாக்டர் ஆக வேண்டும்., இது போன்று இந்தியாவில் கர்ப்பிணி பெண்களை சாக விடக்கூடாது” என்ற இறைவனின் வார்த்தைகளை உறுதியாக உணர்ந்தாள்.

“இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை பெண் மருத்துவர்கள்” என்ற இறைவனின் வார்த்தைகளை, அன்றே உணர்ந்து கொண்டாள்., அவர்களுக்காக தன்னையே அப்போது அர்ப்பணம் செய்து கொண்டாள். அதை கடவுளின் அழைப்பாகவும் உறுதியாக ஏற்றாள். அந்த கணத்திலேயே, அவள் தனது திருமணம் பற்றிய எண்ணத்தையும் கைவிட்டாள்.

அதன்பின், அமெரிக்கா சென்று, 1893–ம் வருடம் நியூ யார்க் நகரில் கார்நெல் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தாள். 1899-ம் ஆண்டில் அவர் தேர்ச்சியுற்று மருத்துவரானார். உடனே தமிழ் நாடு திரும்பினார். அப்போது அவரது தந்தை, வேலூரில் இறை பணியுடன், மருத்துவ பணியையும் செய்துவந்தார்.

1902-ம் வருடம் ஒரு சிறு மருத்துவமனையை வேலூரில் அமைத்து தனது மருத்துவ சேவையை ஐடா ஸ்கட்டர் தொடங்கினார். அதுதான் இன்றைய சி.எம்.சி. மருத்துவ மனையாகும்.

இதன் தொடர்ச்சியே, ஷெல் கண் மருத்துவமனையும், மருத்துவ கல்லூரியும், செவிலியர் பயிற்சி கல்லூரியுமாகும். 1960-ம் வருடம் மே மாதம் 24-ம் நாள் அதிகாலையில் ஐடா இறைவனிடம் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 90. அப்போது அவருக்கு, சிறப்பு தபால் தலை வெளியிட்டு பெருமை சேர்த்தது, இந்திய அரசு!!!.

 

Leave a Reply

Your email address will not be published.