பெங்களூரு:

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலாவுக்கு தனி சமையலறை, பணியாளர்கள் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபாவைப் பற்றித்தான் எல்லோரும் பேசிவருகிறார்கள்.

இவர் யார் தெரியுமா? கர்நாடக மாநிலம், தேவங்கரே பகுதியை சேர்ந்தவர் ரூபா. இவர் சிவில் சர்வீஸ் தேர்வில், 2000ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். அப்போது, தேர்ச்சி அடைந்தவர்கள் பட்டியிலில், 43வது இடத்தை பிடித்தவர். அதே போல ஐதராபாத்தில் ஐ.பி.எஸ்., பயிற்சி பெற்ற போது, ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

குறி பார்த்து துப்பாக்கி சுடுவதில் மிகத் திறமையானவர். . தேசிய போலீஸ் அகாடமியில் பல விருதுகளை பெற்ற இவர், 2016ம் ஆண்டு ஜன., 26ம் தேதி ஜனாதிபதி விருது பெற்றார். ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, முறையாக பரத நாட்டியம் பயின்றிருக்கிறார். இந்துஸ்தானி இசையும் அறி்ந்தவர். மத்திய பிரதேச முதல்வராக இருந்த உமாபாரதியை, நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்தவர்.

பெங்களூருவில், துணை போலீஸ் கமிஷனராக பணிபுரிந்தபோது, வி.வி.ஐ.பி.,க்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தேவையில்லாமல் அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றவர் ரூபாதான்.

அதே போல ஆயுதப்படை டி.சி.பி.,யாக பணியாற்றி போது, அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா வாகன அணிவகுப்பில், அனுமதி பெறாமல் இடம் பெற்று வந்த வாகனங்களை திரும்ப பெற்றார். இவரது இந்த தைரியமான நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டது.