குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்கும் விழா தாமதத்திற்கு காரணம் தெரியுமா?

பெங்களூரு:

ர்நாடக முதல்வராக பதவி ஏற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் குமாரசாமி, இன்று (21ந்தேதி) முதல்வராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது 23ந்தேதிக்கு மாற்றப்பட்டது.

இது அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் பலவாறாக கருத்து பரிமாறப்பட்டு வந்தது. மேலும், காங்கிரஸ் , ஜேடிஎஸ் கட்சிகளுக்கிடையே அமைச்சரவையை பங்கு பிரிப்பதில் இழுபறி என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், குமாரசாமி பதவி ஏற்பு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம். எனவே, நாடு முழுவதும் காங்கிரசார் இன்றைய நாளை துக்கமுடன் அனுசரித்து வரும் நிலையில்,  மகிழச்சிகரமான பதவி ஏற்பு விழாவை இன்று நடத்துவது உசிதமாக இருக்காது என்று கருதியே 23ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கர்நாடகாவில் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்துள்ள வெற்றி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதுவதால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாரதியஜனதாவுக்கு பெரும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், குமாரசாமி பதவி ஏற்பு விழாவுக்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும், எதிர்க்கட்சிகள் ஆண்டுவரும் மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

பதவியேற்பு விழாவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி,  சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ்,  உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.