சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுத்த பெண் நீதிபதியின் சிறப்பு என்ன தெரியுமா?

“சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம். குறிப்பிட்ட வயது பெண்களுக்கு தடை என்பது சட்டவிரோதம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

“பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு” என்று சமூக ஆர்வலர்களும் பெண்ணியவாதிகளும் இத்தீர்ப்பை கொண்டாடுகிறார்கள்.

அதே நேரம் இத்தீர்ப்பு ஐந்து நீபதிகளாலும் ஒருமனதாக அளிக்கப்படவில்லை. அமர்வில் உள்ள நான்கு (ஆண்) நீதிபதிகள், பெண்களுக்கு உரிமை உண்டு என தீர்ப்பளித்திருக்கிறார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்தை தனது தீர்ப்பில் வெளியிட்டிருக்கிறார் பெண் நீதியபதியான   இந்து மல்ஹோத்ரா.

ஆனாலும் 4:1   என்ற விகிதத்தில்  சபரிமலையில் பெண்களுக்கு தடையில்லை என்பது தீர்ப்பாகியிருக்கிறது.

மாற்றுக்கருத்து கொண்டிருக்கும் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா, “இது மத நம்பிக்கை சார்ந்தது. இதில் பல உள்ளார்ந்த மத நம்பிக்கைகளை ஆராய வேண்டும். பெண்களுக்கு கோவிலில் வழிபட, இந்து மதத்தை பின்பற்ற உரிமை உள்ளது. ஆனால் சபரிமலை கோவில் விவகாரம் என்பது இந்து மத நம்பிக்கை தொடர்பானது. இதற்கும் பெண் வழிபாட்டு முறைக்கும் தொடர்பில்லை. குறிப்பிட்ட வயது பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பதே சரியானது” என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கூடுதல் கவனம் பெற்றிருக்கிறார் இவர்.

சரி, இந்து மல்ஹோத்ரா தனிச்சிறப்பு பெற்றவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அதற்கு முன் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் மல்ஹோத்ரா.  உச்ச நீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றினார்.  தொழில் தகராறு சட்டத்தைப் பற்றிய ஆய்வை வெளியிட்டவர்.

இவருக்கு 1956-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி மகளாய் பிறந்தவர் இந்து மல்ஹோத்ரா. இந்துவின் தாயார் பெயர்   சத்யா மல்ஹோத்ரா.

இந்து மல்ஹோத்ரா டில்லியில் உள்ள கார்மெல் கான்வென்ட் பள்ளியில் படித்தார். பிறகு லேடி ஶ்ரீ ராம் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து டில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் முதுகலைப் பட்டம் படித்தார்.

1983-ஆம் ஆண்டு முதல் சட்டப் பயிற்சி பெற ஆரம்பித்தார்.  அதே வருடம் டில்லி பார் கவுன்சில் உறுப்பினராகச்  சேர்ந்தார்.  1988-ஆம் வருடம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யக்கூடிய வழக்கறிஞர்களில் முதல் நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007-ஆம் வருடம் அவர் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

அரியானா மாநிலத்துக்கு சட்ட ஆலோசகராகவும், டில்லி மேம்பாட்டு ஆணையம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், செபி மற்றும் வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் போன்ற அமைப்புகளில் சட்ட பிரதிநிதியாகவும் இந்து பதவி வகித்துள்ளார்.

 

மாவட்ட நீதிமன்றங்களில் வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை விசாரிக்கும் குடும்ப நல நீதிமன்றங்களில் சிறப்பு பிரதிநிதியாக  பிறகு நியமிக்கப்பட்டார். சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதற்கான வழிமுறைகளையும் அவர் வகுத்து கொடுத்தார். பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் குழுவான ‘விசாகா கமிட்டி’ உறுப்பினராகவும் இந்து இருந்தார்.

மேலும், நீதிமன்றங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை விசாரிக்கும் பத்து நபர் கொண்ட குழுவிலும் இவர் உறுப்பினராக செயல்பட்டார். திரைத் துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாகுபாடுகளுக்குத் தீர்வுகாணும் ஆலோசகராகவும் பணியாற்றினார்.  மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் தொடர்பான கல்வி விவகாரங்கள் குறித்த வழக்குகளில் ஈடுபட்டார்.

இவரது முக்கியமான சிறப்பு என்ன என்பதற்கு வருவோம்..

இவர்தான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த பெண் வழக்கறிஞர். ஆம்… 1977-ஆம் ஆண்டு லெய்லா சேத், மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பின்னர், சுமார் 30  வருடங்களுக்குப் பின்னர் 2007ம் வருடம் இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்.

அதே போல உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து நியமிக்கப்பட்டதிலும் ஒரு சிறப்பு உண்டு. இவருக்கு முன்பே ஆறு பெண் நீதிபதிகள் பொறுப்பு வகித்தார்கள். ஆனாலும் , எந்தவொரு கீழ் நீதிமன்றங்களிலும் நீதிபதியாக பதவிப் பொறுப்பு வகிக்காமல் வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதி ஆன பெண் இவர்தான்.

இவர் நீதிபதியாக பொறுப்பேற்ற போது, “சமீபமாக நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் பெண் ஒருவர் நீதிபதியாக பதவியேற்றிருப்பதற்கு, மிக முக்கியமானது என்று பல தரப்பினரும் வாழ்த்தினர்.

ஆனால் இப்போது சபரிமலையில் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தீர்ப்பளித்துள்ளார்” என்று ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.