டில்லி,

டில்லி ரயிலில் பயணம் செய்த ஜுனைத் என்ற இஸ்லாமிய இளைஞர் மாட்டிறைச்சி வைத்தி ருந்ததாக கூறி அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றதாக தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே தினம் பாகிஸ்தானில் நடந்த ஒரு சம்பவம்.

லாகூரில் சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருக்கிறார் கிறிஸ்துவரான அஷ்ஃபாக் மசீஹ் லஹோர்.  அவரிடம் ஒரு இஸ்லாமியர் தனது சைக்கிளை பழுது பார்ப்பதற்காக கொண்டு வந்தார்.

பழுது பார்த்துவிட்டு, ஐம்பது ரூபாய் கேட்டார் லஹோர். சைக்கிள் உரிமையாளரான இஸ்லா மியரோ முப்பது ரூபாய் மட்டுமே தருவதாக  கூறினார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் அந்த இஸ்லாமியர், “சைக்கிள் கடைக்காரரான லஹோர் நபி நாயகத்தை லஹோர் அவமானப்படுத்திவிட்டார்” என்று கூச்சலிட்டார்.

அங்கே கூட்டம் கூடிவிட்டது. அருகில் இருந்த கடைக்காரர் நல்லவேளையாக காவல்துறைக்கு தொலைபேசியில் தகவல் அளித்துவிட்டார்.

அதற்குள் லஹோரை சுற்றி கூட்டம் கூடிவிட்டது. அவரைத் தாக்க தயாரானது கூட்டம்.  நல்ல வேளையாக அப்போது காவலர்கள் வந்துவிட்டார்கள்.

சூழலை உணர்ந்து உடனடியாக லஹோரை கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டனர். இல்லா விட்டால் அங்கே கூடிய கூட்டம்  லஹோரை அடித்து துவம்சம் செய்திருக்கும். உயிருக்கு உத்திர வாதமில்லை.

தற்போது இஸ்லாம் மதத்தை நிந்தனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும்  லஹோரின் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம். அந்த நாட்டு சட்டம் அப்படி.

லஹோர் மீது தவறு இல்லை என்று நிரூபிக்கப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டாலும் அவருக்கு ஆபத்து காத்திருக்கிறது. மதஅடிப்படைவாதிகள் யாரேனும் அவரைக் கொல்லக்கூடும்!

அதே நேரம், லஹோர் மீது குற்றம் சாட்டிய நபர், பொய்தான் கூறியிருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டாலும் அவருக்கு தண்டனை ஏதும் கிடையாது.

உலகம் முழுதுமே மத வெறி பரவித்தான் இருக்கிறது.