டில்லி,

பெண்களின் பாதுகாப்புக்கு முதன்மையான நகரம் தமிழகத்தில் சென்னை என்று தேசிய குற்ற ஆவன காப்பகம் தெரிவித்து உள்ளது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகும்.

தேசிய குற்ற ஆவன காப்பகம் நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகள் திருமணம் போன்ற சமூக பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், தற்போது நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளது.

டில்லி, மும்பை, சென்னை உள்பட 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறித்த புள்ளி விபரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

அதில், பெண்களுக்கான பாதுகாப்பு பட்டியலில் சென்னை முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

மேலும்,  75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டில்லியில் 13,808 குற்ற வழக்குகள் பெண்களுக்கு எதிராக பதிவாகி உள்ளதாகவும், அதில்  ஒரு லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறி உள்ளது. இதன் காரணமாக பெண்களின் பாதுகாப்புக்கு டில்லியில் உத்தரவாதமில்லை என்று கூறி உள்ளது.

சென்னையில், 43 லட்சம் பெண்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக 544 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதாவது, 1 லட்சம் பெண்களில் 12 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறி உள்ளது. இதையடுத்து, பெண்களின் பாதுகாப்புக்கு உகந்த நகரம் சென்னை என்று கூறி உள்ளது.

மேலும், சென்னையை அடுத்தே, பெங்களூர், மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.