தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்றியது எது தெரியுமா

தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களைக் காப்பாற்றியது யோகா தான் என்று அவர்களது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களும் அவரது பயிற்சியாளரும் கடும் முயற்சியின் பலனாக 17 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.

பலத்த மழையால் குகையில் திடுமென வெள்ளம் சூழ.. வெளியேற முடியாமல் தவித்தனர் அக்குழுவினர். அப்போது அவர்களிடம் 17 நாட்களுக்கான உணவு இல்லை. அதுசரி.. இப்படி இத்தனை நாட்கள் சிக்குவோம் என்று நினைத்தார்களா என்ன?

குகையினுள் ஆக்சிஜன் அளவும் குறைவாக இருந்தது. இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தது.

பகலில் இருட்டு.. ராத்திரி கும்மிருட்டு. இந்தநிலையில் குகையில் அகப்பட்டிருந்தால் மனநிலையும் பாதிக்கப்பட்டிருக்கும் அல்லவா?

ஆனால் இத்தனை இடர்ப்பாடுகளையும் சிறுவர்கள் கடக்க உதவியது யோகா என்கிறார் அவர்களது பயிற்சியாளர் எக்போல்.

இவர், தனது சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்தவர். அதன்பின் புத்த மடத்தில் சேர்ந்து புத்த துறவியானார். இதனால், யோகக்கலை, ஆசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் ஆகியவற்றை  கற்றுத் தேர்ந்தார்.

 

 

இருக்கும் உணவுகளைச் சிறுவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து அவர்களைச் சோர்வடையாமல் எக்போல் பார்த்துக்கொண்டார்.

ஆனால், ஒருகட்டத்தில் உணவு தீர்ந்துவிட்டது.  சிறுவர்கள் பசியால் சோர்ந்துபோய்விடக்கூடாதே…!

அப்போதுதான் எக்போலுக்கு ஒரு யோசனை தோன்றியது. மாணவர்களுக்கு தியானம், யோகா சொல்லிக்கொடுத்தார்.

இதன் மூலம் உடலில் சக்தியை எப்படிச் சேமிப்பது என்பதை சிறுவர்கள் கற்றுக்கொண்டார்கள்.

காற்றும், சூரிய ஒளியும் குறைந்த அளவே குகைக்குள் நுழைந்தன. இதனால் மூச்சுவிடுவதில் சிறுவர்களுக்கு சிரமம் இருந்தது அல்லவா.. அந்தப் பிரச்சினையையும் போக்கின யோகாவும், தியானமும்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எக்போல், “தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி, சிறுவர்களை பெரும்பகுதிநேரம் அமரவைத்து அவர்களின் சக்தியை செலவழிக்காமல், சோர்வடையாமல் பாதுகாத்தேன். இதனால்தான் இரண்டு வாரங்களுக்கும் மேலாக, போதிய உணவு, காற்று, நீர் இல்லாமலும் சிறுவர்கள் சோர்வடையாமல் இருந்தனர்” என்றார்.