கமல்

மல் பரபர அரசியல்வாதி ஆகிவிட்டார்.  ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டுக்கள், மதுவிலக்கு குறித்து அதிரடி பேச்சு, பெரியார் சிலை விவகாரத்தில் பட்படார் பேச்சு என்று அசத்தி வருகிறார் கமல்.

இந்த நிலையில் அடுத்த அதிரடியை கிளப்பியிருக்கிறார்.

“எம்.ஜி.ஆர். பேரைச் சொல்லி நடக்கும் இந்த ஆட்சி அப்படித்தான் நடக்கிறதா? எம்.ஜி.ஆர். அவர்களின்  கொள்கையான அண்ணாயிசம் என்பது புத்தகமாகவும் வந்திருக்கிறது. அதைக் கையில் வைத்துக்கொண்டு, இந்த ஆட்சியாளர்கள் அதற்கு எதிராக நடக்கிறார்கள்” என்று எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம் பற்றி பேசி அ.தி.மு.க. தொண்டர்களை தனது பக்கம் திரும்பவைக்க முயற்சித்திருக்கிறார்.

அதோடு, “அண்ணாயிசம் என்று இருந்தும் இந்த ஆட்சியாளர்கள் இப்படி நடக்கக் காரணம்… அ.தி.மு.க.வில் குழப்ப நிலை தொடர காரணம்…. நல்லவர்கள் ஒதுங்கியிருப்பதுதான். அவர்கள், மக்கள் நீதி மய்யம் நோக்கி வர வேண்டும்” என்றும் கமல் அழைப்பு விடுத்திருக்கிறார்.

சைதை துரைசாமி

இந்த அழைப்பும் கவனிக்கத்தக்கது. இதுவரை பொதுவாக மக்களுக்கு அழைப்புவிடுத்து வந்த கமல், தற்போது எம்.ஜி.ஆரின் தீவிர தொண்டர்களாக விளங்கிய முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கத் துவங்கியிருக்கிறார்.

அதாவது அண்ணாயிசம் குறித்து தொகுத்து புத்தகமாக வெளியிட்டவர் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமிதான்.  சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், அந்நூலை சைதை துரைசாமி வெளியிட்டார்.

தற்போது அரசியலைவிட்டு ஒதுங்கியிருக்கிறார். அ.தி.மு.க., வி.கே.சசிகலா கையில் இருந்தபோது இவருக்கு பதவி வழங்கியும் அதை மறுத்துவிட்டார் சைதை துரைசாமி. தொடர்ந்து கல்வி மற்றும் பொதுப்பணிகளில் மட்டும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ரஜினி, எம்.ஜி.ஆர். சிலையை திறந்துவைத்தார் அல்லவா.. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அன்றைய நிகழ்ச்சியில்   தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று ரஜினி பேசியதை வரவற்றவர்.

இந்த நிலையில், “அண்ணாயிசம் – ஒதுங்கியிருக்கும் நல்லவர்கள் வர வேண்டும்” என்றெல்லாம் கமல் பேசியிருப்பது சைதை துரைசாமிக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாகவே படுகிறது.

“சமீபத்தில் “மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” என்று கமல் கூற.. அன்று மாலையே, “மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது” என்றார் ரஜினி.

இப்போது ரஜினி விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகருக்கு கமல் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆக, ரஜினி கமல் இடையே, திரையில் தொடர்ந்த ஸ்டார்வார் இப்போது அரசியிலிலும் துவங்கிவிட்டது” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.