நான் “ராட்சசன்” ஆனது எப்படி?: நடிகர் “ராட்சசன்” சரவணன் பேட்டி

--

மிழ்த் திரையுலகில் சமீபத்தில் ரசிகர்களை மிரட்டியது யார் என்றால், ராட்சசன்  படத்தின் வில்லனான “ராட்சசன்”தான்.

சிறுவயதிலேயே வயதானவர் போல் பாதிப்பை ஏற்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்ட தோற்றம்.. உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிரமமான மேக்அப்.. ஆனாலும் உடல் மொழியிலேயே கொடூரத்தை வெளிப்படுத்திய விதம்.. என்று மிரட்டியிருக்கிறது அந்த கதாபாத்திரம். அதிலும்  ‘கிறிஸ்டோபர்’ மற்றும்  ‘மேரி பெர்னாண்டோ’  என மகன், தாய் என இரு கதாபாத்திரங்களுக்குமான வித்தியாசத்தை நுணுக்கமாக வெளப்படுத்தியிருந்தார் நடிகர். யாரோ நாற்பது வயதான வெள்ளைக்கார நடிகர்தான் நடித்திருக்கிறார் என்று பலரும் நினைத்தார்கள்.

ஆனால் நம்ம ஊரு பையன் சரவணன்தான் அப்படி  அதகளப்படுத்தியிருக்கிறார்.

மேரி பெர்னாண்டோ – சரவணன் – கிறிஸ்டோபர்’ ’

அவரிடம் பேசினோம்..

“அரியலூருக்கு பக்கத்துல இருக்கற வெற்றியூர் கிராமம்தான் என் சொந்த ஊர்.  திருச்சியில் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். ஆனால் சின்ன வயசில் இருந்தே மனம் முழுக்க, சினிமாவில நடிக்கணும்கிற ஆசை ஊறிக்கிடந்துச்சு.

சினிமா பி.ஆர்.ஓ. கோவிந்தராஜன், என் அப்பாவோட நண்பர். நேரா சென்னைக்கு வந்து அவரைப் பார்த்தேன்.  சினமாவுல ஜெயிக்க எவ்வளவு கஷ்டப்படணும்.. எவ்வளவு துன்பங்களை தாங்கிக்க வேண்டியிருக்கும்னு விவரமா சொன்னார். எல்லாவற்றையும் தாங்கிக்குவேன் அப்படின்னு உறுதியா சொன்னேன்.

பி.ஆர்.ஓ. கோவிந்தராஜூடன்..

15 வருசம் ஓடப்போச்சு. . சின்னச்சின்ன வேடங்கள்தான். அதற்கே பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்துச்சு. ஆனாலும் என் ஆர்வம் குறையலை.

விஜய் சேதுபதி, சூரி, முனிஷ்காந்த் ராமதாஸ், காளி வெங்கட் அப்படின்னு நிறைய நல்ல உள்ளங்களோட நட்பு கிடைச்சது.  அவங்களோட சேர்ந்து நடிக்க உதவினாங்க.

ஆனாலும் போராட்டமான வாழ்க்கைதான். நடிக்க  வாய்ப்பு இல்லாதப்போ டப்பிங் பேசுவேன். இடையில “நான்” படத்துல சொல்லிக்கிற மாதிரி கேரக்டர் கிடைச்சுது. இப்போ ராட்சசன் எனக்கொரு அடையாளத்தைக் கொடுத்திருக்கு. அந்தப்பட இயக்குநர் ராம்குமாரை மறக்கவே முடியாது.

அவர் முண்டாசுப்பட்டி இயக்கும்போதே எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டியது.  ஆனா  நான் கொஞ்சம் கலரா மாடர்னா இருந்ததால அந்தப் படத்துல வாய்ப்பு கிடைக்கல, ஆனாலும்,  தனது அடுத்த படத்தில் நல்ல கேரக்டரா கொடுக்குறேன்னு, சொன்னார். சொன்னபடியே எனக்கு மிகப்பெரிய கேரக்டரை கொடுத்தார்” என்றார்.

இயக்குநர் ராம்குமாருடன்..

“ராட்சசன் பட கேரக்டர் பற்றி முன்பே இயக்குநர் ராம்குமார் கூறினாரா?” என்றோம்.

அதற்கு சரவணன், “இந்த கேரக்டர் தான், என்று என்னிடம் சொல்லலை.  எய்ட்ஸ் நோயாளி போல உடல் எடையை குறைக்கணும், மொட்டையடிக்கணும்” என்றார். முக்கியமா, “உங்க முகம் ஆடியன்ஸுக்கு தெரியாது”ன்னு மட்டும் சொன்னார்.

மறுநாளே நான் மொட்டையடித்துவிட்டு அவர் முன்னால போய் நின்னேன். “அடிக்கனும்னு தானே சொன்னேன், அதுக்குள்ளவா!” என்று ஆச்சரியப்பட்டார். ஆனாலும் அந்த கேரக்டருக்கு நான் செட் ஆவேனான்னு தொடர்ந்து   சோதித்து பார்த்தார், அவரது சோதனைகள் எல்லாத்திலும் நான் பாஸானேன், பிறகுதான்  நான் நடிக்கப் போகும் கேரக்டர் பற்றி சொன்னார்.  அந்த கேரக்டருக்காக என்னை தயார்படுத்திக்கவும் சொன்னார்” என்றார் சரவணன்.

“கிரிஸ்டோபர் – ‘மேரி பெர்னாண்டோ கதாபாத்திரங்களுக்காக  உங்களை எப்படி தயார் படுத்திக்கிட்டீங்க?”

”ஒரு மாசத்துல 19 கிலோ  எடையை குறைச்சேன். படப்பிடிப்பு முடியறவரை எடை கூடாம கவனமா இருந்தேன். தினமும் நடைப்பயிற்சி.  நடைப்பயிற்சின்னா காலை அல்லது மாலையிலதானே போவாங்க.. நான், நாள் முழுதும் நடப்பேன். உடல் சோர்ந்துபோற வரை நடப்பேன்.

அதே போல உணவுல கட்டுப்பாடா இருந்தேன்.பார்த்து பார்த்துதான் சாப்பிடுவேன். பசிச்சாலும் சரி.. எதாவது பதார்த்தத்தை சாப்பிடணும்னு ஆசை வந்தாலும் சரி.. கட்டுப்படுத்திக்குவேன்”

“ராட்சசனாக” உருமாற்றம்..

“அந்த மேக் அப் அனுபவம் எப்படி?”

” படப்பிடிப்பு முடியறதுக்குள்ள 51 முறை மொட்டை அடிச்சிக்கிட்டேன். இந்த வித்தியாசமான மேக் அப்பை போடுவதற்கு தினசரி நான்கரை மணி நேரம் வரை ஆகும். ஆனா அதுக்கப்புறம் மூன்றரை மணி நேரம்தான் மேக் அப் தாங்கும்.  அதன் பிறகு மேக் அப் கெமிக்கல்  இறுக ஆரம்பிக்கும். வலி ஏற்படும்.  ஆனால் நான் தொடர்ந்து எட்டு மணி நேரம் வரை இதே மேக்அப்பை தாக்குப்பிடிச்சேன்.

தவிர தொடர்ந்து அந்த மேக் அப் போட்டதில் கழுத்து பகுதியில் கொப்புளங்கள் வந்துவிட்டன.   அடுத்தடுத்த முறை மேக் அப் போடும்போது  வலி பலமாக இருக்கும்.

மேக் அப் போட்டுவிட்டால், வாயை ஒரு அளவுக்கு மேல் திறக்க முடியாது.  கையிலேயே ஸ்ட்ரா வைத்திருப்பேன். மெதுவாக வாயைத்திறந்து தண்ணீரோ ஜூஸோ குடிப்பேன். மேக்அப்பை கலைக்கும் வரைக்கும் இதுதான் சாப்பாடு.

சில சமயங்களில் உயிர் போகும் அளவுக்கு வலி ஏற்பட்டிருக்கு. ஆனாலும்  இயக்குநர் ராம்குமார் சார், என் மேல் வைத்த நம்பிக்கைக்காகவும், 15 வருட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வாய்ப்பு என்பதாலும் அதை தாங்கிக்கிட்டேன்.

இப்போ எல்லோரும் பாராட்டறப்போ அந்த வலி எல்லாம் மறைஞ்சிடுச்சு.!”

“வி.ஐ.பி.கள் யார் யார் பாராட்டினாங்க..?”

’ரஜினி சார், அஜீத் சார் உட்பட பலரும் பாராட்டினாங்க.  பேஸ்புக், ட்விட்டர்ல எல்லாம் என் கேரக்டரை வச்சு மீம்ஸ் போடுறாங்க. தெரியாத பலரும்கூட வீட்டுக்கே வந்து பாராட்டினாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு!”

“நடிப்பார்வம் என்பதே பணம், வசதி வாய்ப்பு என்பதைவிட.. நம் முகம் பலருக்கும் தெரிய வேண்டும்.. பிரபலமாக வேண்டும் என்கிற உந்துதலால்தான் வரும். ஆனால் உங்கள் முகமே தெரியாத கேரக்டரில் நடிக்க எப்படி ஒத்துக்கிட்டீங்க?”

”உண்மைதான். ஆனா என்னைவிட எனது கேரக்டர் பேசப்படணும்ங்கிறதுதான் என் ஆசை. இந்த படத்துல என் முகம் தெரியாட்டாலும், கேரக்டர் பேசப்படும்னு நம்பிக்கை இருந்தது. அது நடந்திருக்கு. இதுதான் மகிழ்ச்சி!”.

சரவணன்

“அடுத்தடுத்த படங்கள் என்னென்ன கமிட் ஆகியிருக்கு..?”

”பெரிய நிறுவனங்கள் உட்பட  பலவற்றில் இருந்து அழைப்பு வந்திருக்கு. விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்!”

“எதிர்கால லட்சியம் என்ன..  ஹீரோ.. கட்சி.. முதல்வர்…?”

”அய்யய்யோ.. அப்படி எந்த எண்ணமும் கிடையாது. கடைசி வரை நடிக்கணும். ஏத்துக்கிட்ட கதாபாத்திரத்துக்கு உண்மையா இருக்கணும். இயக்குநர்களுடைய நடிகன்னு பேர் வாங்கணும். அதுதான் ஆசை.. கனவு, லட்சியம்.. எல்லாம்!”

நல்ல நடிகரின் நல்ல லட்சியம் நிறைவேறட்டும் என்று வாழ்த்து சொல்லி கிளம்பினோம்.