ஜிம்பாவே நாட்டின் புரட்சித்தலைவியைத் தெரியுமா?

--

ஜிம்பாவே நாட்டில் சத்தமில்லாமல் ராணுவப் புரட்சி நடந்திருக்கிறது.

கடந்த 37 ஆண்டு காலமாக ஜனாதிபதியாக ஆட்சி செய்து வந்த ராபர்ட் முகாபேயை “கொஞ்சம் வீட்லயே குந்தி இரு நைனா…” என்று சொல்லி அவரை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறது ஜிம்பாவே ராணுவம்.

புரட்சிக்குக் காரணம் ராபர்ட் முகாபே 94 வயதானவர் என்பதைவிடவும் அங்கேயும் ஒரு புரட்சித் தலைவி உருவாகியதுதான்..!

அந்தப் புரட்சித் தலைவியின் பெயர் கிரேஸ். ராபர்ட் முகாபேக்கு டைப்பிஸ்ட்டாக பணிக்கு வந்தவர் அப்படியே அவருக்கு இரண்டாவது மனைவியாகிவிட்டார். வயது 40 சொச்சம். இருவருக்கும் வயது வித்தியாசம் 50-க்கும் மேல்.

1980-களில் முகாபே ஜிம்பாவேக்கு ஜனாதிபதியானவுடன் இந்தியா வந்து அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது “இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி, எனது சகோதரி.. இவரது ஆலோசனையைக் கேட்டுத்தான் இனிமேல் நடப்பேன்…” என்று இந்திரா காந்தியிடம் ஐஸ் மேல் ஐஸ் வைத்து வேண்டியதையெல்லாம் பெற்றுக் கொண்டு போனார். அடுத்து வந்த ராஜீவ் காலத்திலும் அடிக்கடி இந்தியா வந்து தனது நட்பை பேணிக் காத்தார்.

2000-களில் பிரிட்டனை சேர்ந்த வெள்ளை இன மக்களை அடித்துத் துரத்தி அவர்களது சொத்துக்களை அரசுடமையாக்கி ஒரு திடீர் ஹீரோவாக ஆனார் முகாபே. இதற்காக ஜிம்பாவே மீது ஐ.நா. சபை தடை உத்தரவெல்லாம் பிறப்பித்தது.

ஜிம்பாவேயின் கரன்சி கத்தை, கத்தையாக செல்லாததாகி டாலருக்கு எதிரான அவர்களின் ரூபாய் மதிப்பு எட்டாத உயரத்துக்கு போக.. ஒரு மூட்டை நிறைய பணத்தைக் கொண்டு போய் கொடுத்து காய்கறிகளை ஒரு சினனப் பையில் வாங்கி வர வேண்டிய சூழலை உருவாக்கியிருந்தார் இந்த முகாபே. ஆனாலும் மக்கள் சகித்துக் கொண்டார்கள்.

இப்போது நிலைமை கை மீறிப் போனதற்குக் காரணம், அவருடைய இரண்டாவது மனைவியான புரட்சித் தலைவி கிரேஸிதானாம்.

தனது பெயரிலும், தனது உறவினர்கள் பெயரிலும் பல்வேறு நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார் கிரேஸி.

முகாபேயின் கட்சிக் கூட்டங்களில் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்ட கிரேஸியை மக்கள் “அம்மா” என்றுதான் அழைக்க வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

தான் பயன்படுத்திய உள்ளாடைகளை தனது கட்சித் தொண்டர்களுக்கு ஏலத்தில் கொடுத்து கட்சிக்கு நிதி திரட்டியிருக்கிறார் இந்த வித்தியாசமான புரட்சித் தலைவி.

ஊரே பிச்சையெடுத்துக் கொண்டிருக்க, இந்தம்மா மட்டும் மாதத்திற்கு ஒரு முறை தனி விமானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு பயணித்து வேண்டிய பொருட்களையெல்லாம் அரசு பணத்திலேயே அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்.

கடந்த முறை தென்னாப்பிரிக்கா சென்றபோது அந்த நாட்டு இளம் பெண் ஒருவரை ஹோட்டல் ஒன்றில் நடந்த அழகிப் போட்டியில் தாக்கியதில் அந்த அழகிக்கு பெரும் காயம். ஆனாலும் அடுத்த நாட்டு ஜனாதிபதியின் மனைவி என்பதால் பத்திரமாக கிரேஸியை அனுப்பி வைத்திருக்கிறது தென்னாப்பிரிக்க அரசு.

உள்நாட்டிலோ கிரேஸியை விமர்சித்து யார் எழுதினாலும் உடனடியாக கைதாம்.. ஜெயிலாம்.. பத்திரிகை சுதந்திரத்தையே கேலிக் கூத்தாக்கியிருக்கிறார் கிரேஸ். உள்ளாடைகளை கட்சித் தொண்டர்களுக்கு கொடுத்ததை விமர்சித்து எழுதிய பத்திரிகையாளர்கள் உடனேயே கைதாகி ஜெயிலில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

முகாபேயின் அமைச்சரவையில் துணை ஜனாதிபதியாக இருந்த Emmerson Mnangagwa -வை இந்தம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். “அவர் ஒரு பாம்பு.. முகாபேயின் கழுத்தைப் பிடித்திருக்கிறார். கொத்தாமல்விட மாட்டார்…” என்று சமீபத்தில் பத்திரிகைளுக்கு பேட்டியே கொடுத்திருக்கிறார் கிரேஸ்.

இவர் பேட்டி கொடுத்த நான்காவது நாளே அந்தத் துணை ஜனாதிபதியை வேலையை விட்டுத் தூக்கிவிட்டார் முகாபே. அவரும் பயந்துபோய் தென்னாப்பிரி்ககாவுக்கு தப்பியோடியிருக்கிறார்.

இத்தனை கூத்துக்களையும் பொறுத்துப் பார்த்த ராணுவம், பொறுமை தாங்காமல் நேற்றைக்கு அதிரடியாய் களத்தில் குதித்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.

இந்தப் புரட்சிக்குக் காரணமாக ஜிம்பாவே ராணுவம் சொன்னது.. “ஜனாதிபதியைச் சுற்றிலும் கிரிமினல்களும், தேச விரோதிகளும், நயவஞ்சகர்களும் அதிகரித்துவிட்டார்கள். நாட்டைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் ஜனாதிபதிக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது…” என்று சொல்லியிருக்கிறது.

ராபர்ட் முகாபேயை வீட்டுக் காவலில் வைத்துவிட்டு அவருடைய மனைவியான புரட்சித் தலைவி கிரேஸியை நமீபியாவுக்கு ஓடும்படி உத்தரவிட்டு அனுப்பி வைத்திருக்கிறது.

சென்ற வாரம் நீக்கம் செய்யப்பட்ட துணை ஜனாதிபதியே இ்ப்போது நாட்டின் ஜனாதிபதியாவார் என்று ஆப்பிரிக்க உலகம் எதிர்பார்க்கிறது.

எல்லா நாடுகளிலும் புரட்சித் தலைவிகளின் கைகளில் ஆட்சியும், அதிகாரமும் கிடைத்துவிட்டால், தலைகால் புரியாமல்தான் ஆடுகிறார்கள்.