ர்.கே. நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோர் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பெரிதும் பேசப்படுகிறது.

ஆனால் அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டிருந்தவரும், முதல்வராக  பதவி வகித்தவருமான ஜெயலலிதாவின் வேட்பு மனுவே தள்ளுபடி ஆகியிருக்கிறது.

2001 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில்தான் இது நடந்தது

அத் தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் 2001ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே கிருஷ்ணகிரி தொகுதியில் தேர்தல் அதிகாரி எம்.மதிவாணனிடம் தனது வேட்பு மனுவை ஜெயலலிதா தாக்கல் செய்தார். பிறகு ஏப்ரல் 18ஆம் தேதி ஆண்டிப்பட்டி தொகுதியில் தனது வேட்பு மனுவை ஜெயா என்ற தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான ஏப்ரல் 23ஆம் தேதி ஜெயலலிதா சார்பில் புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய தொகுதி களிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது டான்சி ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு  மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்கக்க்கூடாது என்பது சட்டம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3) இதைக் கூறுகிறது. அதாவது ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல்  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல் தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார். அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

அது மட்டுமல்ல.. ஒருவர் இரு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக்கூடாது என்பதும் சட்டம். ஆனால் ஜெயலலிதா, நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆகவே நான்கு தொகுதிகளிலும் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

“தன் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து விடுபட, தலைசிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதிட்டவர்….  தனது கட்சியில் வழக்கறிஞர் அணி என்று பெரும் சட்டப்படையை வைத்திருப்பவர்.. இப்படிப்பட்ட ஜெயலலிதா சட்டம் தெரியாமல் வேட்புமனு தாக்கல் செய்தாரா” என்ற கேள்வி அப்போதே எழுந்தது.

ஆனால், “தி.மு.க.தான் சதி செய்து தனது வேட்புமனுக்களை தள்ளுபடி செய்ய வைத்தது” என்று பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா.

அத் தேர்தலில் அதமுக பெரும்பான்மை பெற்றதும், ஜெயலலிதா அவசர அவசரமாக முதல்வர் பதவி ஏற்றதும். (பதவிப்பிரமாணம் செய்து வைத்தவர் அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி) சர்ச்சையை ஏற்படுத்தியதும், இது தொடர்பாக வழக்குகள் நடந்ததும் தனிக்கதை.

போகட்டும்… சிறந்த நிர்வாகி, நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவர் என்று அ.தி.மு.கவினர் உட்பட சில பலரால் சொல்லப்படும் ஜெயலலிதாவின் வேட்புமனுக்களே தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

ஆகவே, விஷால், தீபா ஆகியோரை கிண்டல் செய்யாதீர்கள் மக்கழே!