சென்னை:

கொரோனா வைரஸ் தொற்று குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை, தமிழகத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சித் துணைவர் துரைமுருகன் பேசும்போது, ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை என்று எங்களை காலி செய்ய பார்க்கிறீர்களா? என்று நகைச்சுவையாக பேசினார். இதனால் சட்டமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

தமிழக சட்டமன்றத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்றது. அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். அப்போது, நமது சுகாதார பணியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே யாரும் பதட்டம் அடைய வேண்டாம், இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றவர்,தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், உபகரணங்களும் தயாராக இருப்பதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினரும், எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன், மக்கள் பயப்பட வேண்டாம். தமிழ்நாட்டில் ஒன்றும் இல்லை என்று பேசுகிறீர்கள். ஆனால் போனை எடுத்தாலே….. கொரோனா பற்றி விளம்பரம் வருகிறது….

இங்கு சட்டசபைக்கு வந்தால் வாசலில் சுகாதார பெண் பணியாளர்களை நிறுத்தி கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்ய சொல்கிறீர்களே…   என்று அவரது கிண்டலான பாணியில் கேள்வி எழுப்பினார்.

மேலும்,  சட்டசபையில் உள்ளவர்களுக்கு யாருக்கும் பாதிப்பு இல்லை… என்றாலும்… இங்கு யாருக்கும் மாஸ்க் இல்லை…..  எந்த முன் எச்சரிக்கை யும் இங்கு இல்லை என்றவர், …..

ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனாவால் ஏராளமானோர் பலியாகி வருகிறார்கள்… ஆனால், நீங்கள் இங்க  ஒன்றும் இல்லை… ஒன்றும் இல்லை என்று கூறுகிறீர்கள்…. எங்களை காலி செய்ய பார்க்கிறீர்களா?….  ஏதாவது ஒன்று நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது? பயத்தால் நாங்கள் கை குட்டையை வாயில் பொத்திக் கொள்கிறோம். இருமுவதற்கே பயமாக உள்ளது. எல்லோருக்கும் மாஸ்க் கொடுங்கள்… என்று நகைச்சுவையாக பேசினார்ர.

துரைமுருகன் நகைச்சுவை பேச்சால் சட்டமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

இதையடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “உறுப்பினருக்கு இது போன்ற பயம் எல்லாம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்,  அமைச்சர் சிறப்பாக பேசி உள்ளார். எனவே நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேகமாக பரவும் என்பதால்தான் நீங்கள் அச்சப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன் என்று துரைமுருகனை கலாய்தார்…

தொடர்ந்து பேசிய எடப்பாடி,   இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர். எனவே நீங்கள் (துரைமுருகன்) கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு வயது அதிகமானாலும் அச்சப்பட தேவையில்லை என்றவர்,  தமிழகத்தில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதால் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

பின்னர் பேசிய துரைமுருகன், “சட்டசபையில் இருந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்குங்கள். கிருமி நாசினியை தெளியுங்கள்” என்று கூறினார்..