சென்னை:

யர்நீதி மன்ற உத்தரவைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் கடை வைக்கப்படுவது ஒழுங்கப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, அங்கு கடை நடத்த விரும்புபவர்கள் ஏப்ரல் 3ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஆசியாவின் 2வது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரைக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால், கடற்கரை பகுதி முழுவதும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில்,  சென்னை உயர்நீதி மன்றம் பல முறை தமிழகஅரசையும், சென்னை மாநகராட்சியையும் எச்சரித்து உள்ளது. மேலும்,   கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்றவும், விதிகளை மீறுவோரை கட்டாயப்படுத்தி அகற்றவும்  உத்தரவிட்ட நீதிபதிகள், கடைகளை ஒழுங்குப்படுத்தி, அதற்கு வாடகை வசூல் செய்ய வேண்டும் என்றும், அங்கு 900 பேருக்கு மட்டும் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் லூப்சாலை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம், மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், மெரினா கடற்கரையில் கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

உயர்நீதி மன்றம் உத்தரவின்படி ஒதுக்கப்பட உள்ள 900  கடைகளில்,  60 சதவீத கடைகள்ற, தற்போது கடற்கடையில் கடை வைத்துள்ளவர்களுக்கும், 40 சதவிகித கடைகள்  புதிதாக தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், விற்பனை கட்டணம், விற்பனை நேரம் மாத வாடகை தொகை, பராமரிப்பு கட்டணம், அபராத தொகை போன்ற விவரங்களைக் கொண்ட விண்ணப்பங்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை சமர்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு குலுக்கல் முறையில் விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு கடைக்கான சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும், என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மெரினா கடற்கரை வியாபாரிகளுக்கு மாத வாடகை ரூ.5ஆயிரம்! சென்னை உயர்நீதி மன்றம்