புதுடெல்லி: உலகின் உயரமான மற்றும் குளிர்நிறைந்த போர்க்களமான லடாக்கின் சியாச்சின் கிளேசியர், சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், லடாக் பகுதியில், இமயமலையின் காரகோரம் தொடரில் 24000 அடி உயரத்தில் அமைந்துள்ளது சியாச்சின் கிளேசியர் பனிமலைப் பகுதி.

இது பெரிய ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். துருவப் பகுதியில் அமையாத, உலகின் இரண்டாவது பெரிய பனிப்பாறையாகும் இப்பகுதி.

கடந்த 2007ம் ஆண்டு முதல், இந்திய ராணுவம் சியாச்சின் பகுதியில் மலையேற்ற நடவடிக்கையை ஏற்பாடு செய்து வருகிறது. மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு, ஆண்டுதோறும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நடைபெறும்.

ஆனால், கடந்தாண்டு இந்த போர்முனையை சுற்றுலாவுக்கு திறந்துவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது. சியாச்சின் தளத்திலிருந்து குமார் போஸ்ட் பகுதி வரையான முழு பகுதியும் சுற்றுலாப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, அப்பகுதிக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.