ல்பாக்கத்தில், கடந்த இருபத்தியைந்து ஆண்டுகளாக,   பார்வைக்கட்டமண் ஏதும் வாங்காமல் மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வருபவர் டாக்டர் புகழேந்தி.  மிக அவசியமான மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்பவர். இவரை இப்பகுதியினர் “மக்கள் மருத்துவர்” என்றே அழைக்கிறார்கள்.

““மருத்துவம் பார்க்க வருகின்றவர்களிடம் பார்வைக் கட்டணமாக எதையும் பெறாதது மட்டுமல்ல… அவர் பதிவு பெற்ற மருத்துவராக இருப்பதால் சலுகை விலையில் அவருக்கு மருந்துகளையும் மக்களுக்கு மலிவாக அளிக்கிறார்.

எடுத்துக்காட்டாக  ரத்த சோகையை போக்க அகொடுக்கப்படும் டானிக்கை, 97 ரூபாய் விலையில் மருந்துக் கடைகளில் விற்கிறார்கள். அதே டானிக்கை 27 ரூபாய்க்கு வாங்கி, கூடுதலாக பத்து ரூபாய் விலை வைத்து மக்களுக்கு விற்கிறார். ரத்தக் கொதிப்புக்கு வழங்கப்படும் அம்லோடிபின் என்ற மாத்திரை வெளியில் பத்து மாத்திரை 32 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அவரோ, நான்கு ரூபாய்க்கு வாங்கி, பத்து ரூபாய்க்குக் கொடுக்கிறார். இதில் கிடைக்கும் சில ரூபாய்களைத்தான் கிளினிக் நடத்த வாடகையாகக் கொடுத்து வந்தார். தினமும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 80 நோயாளிகள் வரையில் தினமும் வந்து செல்கிறார்கள். பத்து ரூபாய் இருந்தால், அவரிடம் வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியும்.

புகழேந்தி

மருந்துக் கம்பெனியின் பிரதிநிதிகள் யாரும் அவரை நெருங்க முடியாது. ‘எந்த நோய்க்கு என்ன மருந்து மலிவான விலையில் கொடுக்கும்?’ என்பதை விசாரித்து, அவரே நேரடியாக மருந்துகளைக் கொள்முதல் செய்கிறார். அவருடைய செயல்பாடுகளை மருத்துவ உலகினர் ஏற்றுக் கொள்வதில்லை. அரசின் துணையில்லாமல், அவரது கிளினிக் இடிக்கப்பட வாய்ப்பில்லை” என்கின்றனர் கல்பாக்கம் மக்கள்.

இந்தந ி அவரது கிளினிக் செயல்பட்டுவந்த கட்டிடம் இரவோடு இரவாக இடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் டாக்டர் புகழேந்தி தெரிவிப்பதாவது:

“குறிப்பிட்ட அந்த கட்டடத்தில் கடந்த 1990-ம் வருடம்  பிப்ரவரி 24-ம் தேதியில் இருந்து மருத்துவம் பார்த்து வருகிறேன். ஆரம்பத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் கடந்த  2014-ம் வருடம், கட்டட உரிமையாளர் மனோகரன் என்னைக் காலி செய்ய வைப்பதற்காக நான் மின் கட்டண இணைப்பை முறைகேடாகப் பெற்றுவிட்டதாக புகார் தெரிவித்தார்.

நான் தனிப்பட்ட முறையில் எந்தவொரு மின் இணைப்பையும் பெறவில்லை என்றதோடு, கட்டட உரிமையாளரின் விருப்பம் இன்றி மின்வாரியத்தில் இணைப்புக்கான அனுமதி அளிக்கப்படாது என்றும் அவரிடம் தெரிவித்தேன்.

பிறகு அவருக்கு வாடகை கொடுத்து அனுப்பினாலும்,  அவர் அதைப் பெற மறுத்தே வந்தார். இதனால் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடுத்தேன். வாடகையையும் நீதிமன்றத்தில் செலுத்துகிறேன்.

இந்த நிலையில்  சில நாட்களுக்கு முன்பு துரைராஜ் என்பவரை அழைத்துக் கொண்டு  வந்த மனோகரன். “இந்த இடத்தை இவர் வாங்கிவிட்டார். இனி இவரிடம் வாடகையைக் கொடுத்து விடுங்கள்’ என்றார். நான், “நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அங்கு வாடகையை செலுத்தி வருகிறேன். இந்த நிலையில் எப்படி இவரிடம் வாடகை தர முடியும்” என்று கேட்டேன்.

பிறகு சதுரங்கபட்டினம் காவல்நிலைய எழுத்தர் தயாளன் வந்து,  என் மீது புகார் அளித்திருப்பதாகவும் காவல் நிலையத்துக்கு வரும்படியும் வற்புறுத்தினார்.  சிவில் வழக்கில் காவல்துறையினர் தலையிட  முடியாது என்பது சட்டம். ஆகவே நான் வர முடியாது என தெரிவித்தேன். அவர் சென்றுவிட்டார்.

மறுநாள் துரைராஜ் ஆட்கள் சிலர் கிளினிக் ஓடுகளைப் பிரித்துக் கொண்டிருப்பதாக எனக்கு தகவல் வந்தது. உடனே நான் அங்கு சென்று எதிர்த்து கேட்டேன். அவர்கள் ஓடிவிட்டார்கள்.

உடனடியாக சதுரங்கபட்டினம் காவல்நிலைய  உதவி ஆய்வாளர்  விஜயகுமாரிடம் இது குறித்து புகார் அளித்தேன். என்னுடைய கிளினிக்குக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் குறிப்பிட்டேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுமார் 8.30 மணிக்கு என் கிளினிக்குக்கு வந்தேன். கிளினிக் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. மேற்கூரை ஓடுகளையும் பிரித்துப்போட்டிருந்தார்கள்.  நாற்காலி, மருந்து பட்டைகள், குடுவைகள் உட்பட எல்லாவற்றையும் அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டார்கள். மக்கள் வர தடை ஏற்படுத்தும் விதமாக,  ஜல்லிக்கற்களையும் வாசல் முன் கொட்டிவிட்டார்கள்.

உடனடியாக அவசர காவல் உதவி எண்ணான 100-க்குத் தொடர்பு கொண்டேன். ஆனால் அவர்களும்  வரவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தார் புகழேந்தி.

மேலும் “தமிழக சுகாதாரத்துறையின் நடவடிக்கைகள் பலவற்றுக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். எம்.ஆர்.தடுப்பூசியின் பின்னணி குறித்தும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண மர்மங்கள் குறித்தும் விரிவான அறிக்கைகளை  வெளியிட்டேன்.

இடிக்கப்பட்ட கிளினிக்..

ஜெயலலிதாவுக்கு எம்பாமிங் செய்தது முதல் அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் குறித்தும் என் ஆய்வறிக்கையில் பட்டியலிட்டேன். என்னுடைய கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளால் பதில்  அளிக்க முடியவில்லை.

சதுரங்கபட்டினம் பகுதியில் தடுப்பூசி போடச் சொல்லி குழந்தைகளை வற்புறுத்தினார்கள். இது குறித்து நான் கேட்டபோது, ‘காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு” என்றார்கள். அதற்கு நான்  ‘தடுப்பூசி போட்டுக்கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்த ஆட்சியருக்கு எந்தவித  அதிகாரமும் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா?’ என்று எதிர்த்து கேட்டேன்.

இது போன்ற நிகழ்வுகளால் ஆத்திரமான ஆளும் வர்க்கம், எனக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காக, கட்டட உரிமையாளரை பயன்படுத்துகிறார்கள்.   சதுரங்கபட்டினம் காவல்நிலையத்தில் பணியாற்றுபவர்களோடு சில சமயங்களில் பொது நலனுக்காக நான் விவாதம் செய்திருக்கிறேன். அவர்களும் தற்போதைய சூழலைப் பயன்படுத்திக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்” என்கிற புகழேந்தி, “மக்களை கொடுமைப்படுத்தும்  மருத்துவ மோசடிகளுக்கு எதிராக தனியொரு மனிதனாகவே போராடி வருகிறேன்.  இதனால் எனக்கு எத்தனை இடர்கள் வந்தாலும்  அவற்றை சட்டரீதியாகவே எதிர்கொள்வேன்” என்றார் உறுதியான குரலில்.