ஆந்திராவில் படுக்கைகள் பற்றாக்குறை குறித்து பேசிய மருத்துவர்: கைது செய்ய குண்டூர் கலெக்டர் உத்தரவு

குண்டூர்: ஆந்திராவில் படுக்கைகள் பற்றாக்குறை குறித்து பேசிய டாக்டரை  குண்டூர் கலெக்டர் கைது செய்ய உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைதான மருத்துவரின் சோம்லு நாயக். நந்தேண்ட்லா ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவ அதிகாரி. நர்சராபேட்டையில் நடைபெற்ற மறு ஆய்வுக் கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் முழு வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த ஒரு மருத்துவர் கூறியதாவது: மருத்துவர் சோம்லு நாயக் ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கைகள் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்தார். அப்போது பதிலளித்த கலெக்டர், அது உண்மை இல்லை என்று கூறினார்.

இந்த விவரம் மாவட்ட மருத்துவ சுகாதார அதிகாரியிடமும் எழுப்பப்பட்டதா என்றும் கலெக்டர் கேட்டார். அதன் பிறகு தான் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் நாங்கள் வேதனை அடைந்தோம் என்று கூறினார். சம்பவத்தின் போது கேள்வி எழுப்பிய மருத்துவரிடம், என்ன முட்டாள்தனம், இந்த மருத்துவர் எங்கிருந்து வருகிறார்? அவரை கைது செய்து அழைத்து செல்லுங்கள் என்று உத்தரவிடுவது தெரிகிறது.

அதன் பிறகே கேள்வி எழுப்பிய மருத்துவர் தமது கோப்புகளை எடுத்துக் கொண்டு அந்த அரங்கத்தில் இருந்து வெளியேறுகிறார். பின்னர், மருத்துவரை சஸ்பென்ட் செய்யுமாறு கலெக்டர் மாவட்ட மருத்துவக்கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார். சோம்லு நாயக்கை டிஎஸ்பி அலுவலகம் அழைத்து சென்ற போலீசார் பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.

சோம்லு நாயக் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று குண்டூரைச் சேர்ந்த மாவட்ட மருத்துவ சுகாதார அலுவலர் யாஸ்மினை தொடர்பு கொண்ட கேட்ட போது, கலெக்டர் அலுவலகத்திலிருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்பதால் இதுவரை எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

கலெக்டரின் இந்த அணுகுமுறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இது குறித்து பேசிய டிடிபி எம்.எல்.சி நாரா லோகேஷ், இது ஜெகன் மோகன் ரெட்டி ஒரு பழங்குடி அதிகாரி மீது காட்டிய கொடுமை. குண்டூர் மாவட்டம் நரசராபேட்டையில் கொரோனா குறித்த மறுஆய்வுக் கூட்டத்தின் போது, ​​குறைந்தபட்ச வசதிகள் வழங்கப்படாததை கூறிய அதிகாரிகள் ஏன் குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய நடேண்ட்லா மருத்துவ அதிகாரி சோம்லு நாயக் கைது செய்யப்பட்டார்.

அவர் மிருகத்தனமாக கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்கிறேன். சோம்லு நாயக்கை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கிடையில், இந்த சம்பவத்தை ஆந்திர அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டித்துள்ளது. கைது உத்தரவு திரும்பப் பெறப்படாவிட்டால் வேலைநிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது.