கொரோனா : தமிழகத்தில் இரண்டாம் அலையா? மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை

மிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இரண்டாம் அலை வீசக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

முன்பு அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகப் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.   தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 500க்கு குறைவாகப் பதிவானது.   அத்துடன் சென்னை நகரில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 200க்குள் இருந்து வந்தது.

ஆனால் கடந்த 3 நாட்களாகத் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   கடந்த 5 ஆம் தேதி 543 பேர், 6ஆம் தேதி 562 பேர் நேற்று 567 பேர் என பாதிக்கப்பட்டுள்ளனர்.  இப்போது கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,55,121 ஐ தாண்டி இதில் 12,518 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8.38 லட்சம் பேர் குணம் அடைந்து 3,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது சென்னை நகரில் சுமார் 1000க்கும் மேற்பட்ட தெருக்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது.  மேலும் திருமண நிகழ்வுகள் கோவில் விழாக்கள் உள்ளிட்டவற்றில் கலந்துக் கொள்வோர் குடும்பம் குடும்பமாக பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதைப் போல் கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  எனவே தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வீசும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   குறிப்பாகச் சென்னையில் அதிக அளவில் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.