தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என 4 வகைகளை கொண்ட டெங்கு காய்ச்சல், நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் ஏஜிப்தி என்கிற வகையிலான கொசுக்கள் மூலம் உருவாகிறது. வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் (சம்ப்), மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் உருவாகும் இவ்வகை கொசுக்கள் தான் டெங்குவை பரப்புகின்றன.

காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாக மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது. அதனாலேயே, காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய சூழலில், தர்மபுரி அரசு மருத்துவமனையில், ஒரே நாளில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 230 உள்நோயாளிகளில், 4 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் முதல்வர் சீனிவாச ராஜுலு, “டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு நோயாளிகள் மட்டுமின்றி மற்ற காய்ச்சல் நோயாளிகளும் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் அறிகுறி தெரிந்தாலே, மக்கள் உடனடியாக மருத்துவமனையை அனுக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

ஒரே நாளில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது தர்மபுரி மட்டுமல்லாது, மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளது.