18 வயதிற்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி – மருத்துவர்கள் & நிபுணர்கள் பரிந்துரை!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில், 18 வயதிற்குட்பட்ட பிரிவினர் அதிகளவில் பாதிக்கப்படுவதையடுத்து, அந்த வயதினருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டுமென மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

இதன்மூலம், அந்த வயதுடைய மக்கள் திரளில், கொரோனா பாதிப்பைக் குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஒட்டுமொத்த கொரோனா பாதித்தோரில், சுமார் 3.03% பேர் 10 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் 6.73% பேர், 11 வயதிலிருந்து 20 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு குடும்பத்தில், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு, கொரோனா தொற்றுவதன் மூலம், அந்த வீட்டின் பெரியவர்களுக்கு, குறிப்பாக, வயதானவர்களுக்கு எளிதாக தொற்றும் என்று கூறப்படுகிறது.

எனவேதான், தற்போது 18 வயதிற்கு மேலுள்ளவர்கள் என்ற வரம்பை தளர்த்தி, அதற்கு கீழுள்ளவர்களுக்கு தடுப்பூசியைக் கொண்டுவருவதன் மூலம், அந்த வயதினரிடையே பாதிப்பைக் குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.