எங்களுக்கே பாதுகாப்பு உபகரணங்கள் இல்லையே! எய்ம்ஸ் மருத்துவர்கள் குமுறல்…

டெல்லி:

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்ளக்கூட, தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று நாட்டின் பிரபலமானதும், உயர்ந்த சிகிச்சை அளிக்கக்கூடியதுமான தலைநகர் டெல்லியில் உள்ள பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா, இந்தியா உள்பட 192க்கும் மேற்பட்ட நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இநத வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,616 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 3,36,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 391க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொருத்தவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவிலோய அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 74 பேருக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும், 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 89 ஆக அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம்,இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக முகக்கவசம், சானிடைசர் உள்பட பல்வேறு நோய்தொற்றை தடுக்கும் உபகரணங்கள் உள்ளதாக மத்திய மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன.

ஆனால், நாட்டின் உயர்ந்த மருத்துவமனையான, தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கூட, கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கே கூட தேவையான தடுப்பு உபகரணங்கள் இல்லை என்று, அங்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

தங்களுக்கே இந்த நிலைமை என்றால், மற்ற அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் நிலைமையை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என்று குமுறி உள்ளனர்.